இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் காண்டாமிருகம்!

உலக காண்டாமிருகங்கள் தினம் (22.9.2023)
World Rhino Day
World Rhino Day
Published on

மது பூமியின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கம்பீரமான உயிரினம் சுற்றித் திரிகிறது. அதுதான் காண்டாமிருகம். அதன் வலிமை மற்றும் தோற்றம் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்களின் பார்வையை தன்வசம் அது வைத்துள்ளது. இதன் காரணமாகவே உலகெங்கிலும் ஆண்டுதோறும், செப்டம்பர் 22ம் தேதி, உலக காண்டாமிருகங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இத்தகைய அற்புதமான உயிரினத்தைக் கொண்டாடுவதற்கும், அவற்றின் பாதுகாப்புக்குக் குரல் கொடுப்பதற்கும் நாம் ஒன்று கூடுவோம்.

பல நூறு ஆண்டுகளாக காண்டாமிருகங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் நிலப்பரப்புகளை அலங்கரித்து வருகிறது. இது நமது கிரகத்தின் வளமான வாழ்க்கைச் சூழலை எடுத்துக்காட்டுகிறது. காண்டாமிருகத்தின் சக்தி வாய்ந்த கொம்பு மற்றும் தனித்துவமான அதன் உடல் தோற்றமே இந்த உயிரினங்களை இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்க வைக்கிறது. இருப்பினும், காண்டாமிருகங்கள் இன்று வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், காண்டாமிருகங்கள் பல அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்கின்றன.

காண்டாமிருகங்களின் அவல நிலை:

காண்டாமிருகங்கள் வேகமாக அழிந்து வரும் நிலைக்குக் காரணமாக இருப்பது, அவற்றின் கொம்புகளை வெட்டி சட்டவிரோத வர்த்தகத்தில் லாபம் தேடும் வேட்டையாளர்கள்தான். இது நீண்ட காலமாகவே உள்ளது. காண்டாமிருகத்தின் கொம்புகளின் மருத்துவ குணங்களும், அதைச் சுற்றி பேசப்படும் பல மூடநம்பிக்கைகளின் காரணமாகவே இதன் தேவை எப்போதும் அதிக அளவிலேயே இருந்து வருகிறது. இதனாலேயே உலகெங்கிலும் உள்ள காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமான அளவில் குறைந்துவிட்டது. வேட்டையாடுதல், அவற்றின் வாழ்விடங்களை அழித்தல் மற்றும் மனிதனால் ஏற்படும் பிற அச்சுறுத்தல்கள் போன்றவை இந்த அற்புதமான உயிரினத்தை அழிவின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

வெள்ளை காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜவான் காண்டாமிருகம் மற்றும் சுமத்ரன் காண்டாமிருகம் என மொத்தம் ஐந்து வகை காண்டாமிருகங்கள் உள்ளன. இந்த வகை உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கென தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை முற்றிலும் அழியாமல் தடுப்பதற்கு மக்களின் கவனம் மற்றும் அரசின் பாதுகாப்பு முயற்சிகள் அவசியம் தேவை.

பாதுகாப்பு முயற்சிகள்: அதிர்ஷ்டவசமாக காண்டாமிருகம் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள், அரசாங்கங்கள் மற்றும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களால் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. இது, நமது கூட்டு முயற்சியால் மட்டுமே இவற்றின் அழிவைத் தடுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. மேலும், காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கல்வித் திட்டங்கள் போன்றவை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

உலக காண்டாமிருகங்கள் தினம் இந்த அற்புதமான விலங்குகளைப் போற்றுவதற்கான நாள் மட்டுமல்ல, அவை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய செயல்களைப் பிரதிபலிக்கும் நாளாகும். நமது கிரகத்தின் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாவலர்களாகத் திகழும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை நினைவூட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com