

வீட்டு தோட்டத்தில் பூக்களின் ராஜாவான ரோஜாவிற்கு தனி இடம் உண்டு. ரோஜாவின் நறுமணத்திலும் அழகிலும் மயங்காதவர்கள் இருக்க முடியாது. அந்த வகையில் ரோஜா செடியில் அதிகப்படியான பூக்கள் பூத்துக் குலுங்க செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரோஜா செடி அதிகப்படியான ஈரப்பதத்தில் செழித்து வளராது. அதனுடைய வேர்கள் அழுகத் தொடங்கி இலைகள் வாடிவிடும். மேலும் மண்ணில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்றும், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பூப்பதை நிறுத்தி வாடி விடும்.
இதனைத் தவிர்க்க வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம். அதற்கு முதலில் ஒரு பழுத்த வாழைப்பழம், இரண்டு தேக்கரண்டி மர சாம்பல், தேவையான அளவு மோர் அல்லது தயிர், சிறிது வெல்லப்பொடி மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக நன்றாகக் கலந்து 24 மணி நேரத்திற்கு ஒரு மூடிய பாத்திரத்தில் வைக்கவும்.
இந்தக் கரைசலை ரோஜா செடிகளின் வேர்களில் வாரத்திற்கு ஒருமுறை ஊற்ற வேண்டும். இதனால் செடிக்கு பொட்டாசியம் ,கால்சியம் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால் ரோஜா செடி பூத்துக் குலுங்கும்.
மழைக்காலங்களில் மண் அதிகப்படியான ஈரமாக இருந்தால் உரமிடக்கூடாது. வெப்பநிலை குறைந்து காணப்படும் காலை அல்லது மாலை வேலைகளில் தான் ரோஜா செடிக்கு உரம் இடுவதற்கு சிறந்த நேரம் ஆகும். மேலும் ரோஜா செடிகளின் இலைகளில் உரத்தை விழாமல் பார்த்துக்கொள்வதோடு, வேர்களுக்கு அருகில் நேரடியாக உரத்தைப் போடுவது அதிக பலன் கொடுக்கும்.
ரோஜா செடி இருக்கும் தொட்டிகளில் வடிகால் அமைப்பு சரியாக இருந்தால்தான் தண்ணீர் தேங்கி வேர் அழுகாமல் செடி செழித்து வளர ஏதுவாக இருக்கும். ரோஜா செடியின் புதிய வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் கத்தரிப்பது மிகவும் முக்கியம்.
ரோஜா செடியில் பூஞ்சை அல்லது பூச்சி தொற்றுகள் இருந்தால் மஞ்சள் கரைசல் மற்றும் வேப்ப எண்ணெய் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சூரிய ஒளி ரோஜா செடிகளுக்கு மிகவும் அவசியம் என்பதால் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வெயிலில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். பழைய பூக்கள் ,உதிர்ந்த இலைகளை அவ்வப்போது அப்புறப்படுத்துவது ரோஜா செடியின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
கோடை காலம், மழைக்காலம், பனிக்காலம் என எந்த வகை காலங்களிலும் ரோஜா செடியை கண்ணும் கருத்துமாக பராமரித்து சரியான முறையில் உரமிட்டு வளர்த்தால் வருடத்தில் 365 நாட்களிலும் ரோஜா செடி செழிப்பாக வளர்ந்து பூக்கள் அதிகமாக பூத்து மனநிறைவை உண்டாக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.