
கொன்றை அல்லது சரக்கொன்றை (Cassia fistula, golden rain tree, அல்லது canafistula) என்பது பேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.
தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மரங்களில் சரக்கொன்றை மரம் தனித்துவமான ஒன்று. கோடையின் வறட்சியையும் தாங்கி சித்திரை மாதத்தில், சரம் சரமாக மஞ்சள் நிற மலர்களுடன் பூத்துக்குலுங்கும். இதற்கு சித்திரைப்பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு.
கொன்றையில் பல வகை உண்டு. அதில் சரக்கொன்றை, சிறுக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மஞ்சள் கொன்றை, மயில் கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக்கொன்றை மற்றும் முட்கொன்றை என இருந்தாலும், சரக்கொன்றைதான் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. பண்டைய தமிழ் நூலில் இத்தாவரம் கொன்றை எனவும் சங்க காலத்தில் இது முல்லை நிலத்திற்குரிய பூவாகவும் கருதப்பட்டது. இது அலங்கார அழகு தாவாரமாகவும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
சரக்கொன்றை பூக்களை காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். வேர்ப்பட்டை குடிநீரானது இதய நோய், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும். மரப்பட்டை, தூதுவளை வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி தேனில் குழைத்து பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட, நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் சரியாகும். இலை மற்றும் பூவை அரைத்து கண்களின் மேல் வைத்துக்கட்டினால் கண் நோய்களை தடுக்கும். இலைச்சாறுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் மலச்சிக்கல், ஆசனக்கடுப்பு சரியாகும்.
கொன்றை பூக்களை வேகவைத்து, அதன் சாற்றை பிழிந்து, அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து, கால் லிட்டர் அளவு குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களைத் தடுக்க இம்மரத்தின் இலை மற்றும் விழுதை அரைத்துப் பூசி வரலாம்.
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கண்களுக்குப் புலப்படாத கதிர்வீச்சுகளை இந்த மரம் இழுத்துக் கொண்டு தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது சிவனுக்கு உரிய விருட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்ற இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூஜைக்குரியதாகக் கருதுகின்றனர். சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.
இது பாகிஸ்தான், மியன்மார், இலங்கை வரை பரவலாகக் காணப்படுகின்றது. கேரளாவின் மாநில மலரான இது மலையாள மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இது தாய்லாந்தின் நாட்டின் தேசியப் பூ மற்றும் மரமாகும்.
இதன் பூவானது, பெண்டுலத்தின் (மணி) சரம் போன்ற அமைப்புக் கொண்ட ரெசிமோஸ் வகை மஞ்சரியாகும். வசந்த காலத்தின் இறுதியில் இலைகளே பார்க்க முடியாத அளவில் மரம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கும்.