

போலந்து நாட்டின் வட மேற்கு வனப் பகுதியில், சுமார் நானூறு ஸ்கோட்ஸ் பைன் (Scots Pine) மரங்கள், இயற்கையின் விதிப்படி பூமியிலிருந்து வானத்தை நோக்கி நேராக வளராமல், பக்கவாட்டில் 90° நேர் கோட்டில், வட திசை நோக்கி சுமார் ஒன்றிலிருந்து மூன்று மீட்டர் வரை வளர்ந்து, பிறகு வளைந்து ஒரே மாதிரி மேல் நோக்கிய நேர்கோட்டில் வளர்ந்து வருகின்றன.
இம் மரங்கள் அனைத்தும் மர்மமான முறையில் ஒன்றுபோல கோணலாய் வளர்வதால் இந்தக் காட்டுக்கு கோணல் மரக்காடு (Crooked Forest) என்ற பெயர் உண்டாயிற்று. Krzywy Las என அழைக்கப்படும் இந்தக்காடு போலந்தின் Gryfino என்ற நகரத்திற்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோணல் மரங்கள் ஏறத்தாழ 1930 ஆம் ஆண்டின்போது நடப்பட்டதாகவும், இவைகளின் வளைவுற்ற வடிவத்திற்கு பனிப்புயல் அல்லது இரண்டாம் உலகப் போரின்போது பீரங்கி வண்டிகள் அவ்வழியே தாறுமாறாக சென்று வந்ததே காரணமாகும் என உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
ஆனால் இக்காரணத்தை பென்சில்வனியா யூனிவர்சிட்டி ஏற்க மறுத்து, மனிதர்களின் குறுக்கீடே இம் மரங்களின் வளைந்து வளரும் தன்மைக்கு காரணம் என ஊகிக்கின்றது. பனிப்புயல் போன்ற இயற்கையின் சீற்றம் அல்லது போர்க்கால அமளியில் மண் வெளியில் உண்டான ஒழுங்கற்ற நிலைப்பாடுகள்தான் காரணம் என்றால் இம்மரங்கள் ஒரே மாதிரியாகவும், ஒரே திசை நோக்கியும் வளைந்து வளர்வதற்கான வாய்ப்பே இல்லை எனவும் பென்சில்வனியா யூனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், அக்காலத்தில் காடு வளர்ப்பவர்கள், விஞ்ஞானிகளின் துணையோடு, மரக்கன்றுகளின் மீது சில தந்திரமான யுக்திகளைப் பிரயோகித்து அவை ஆரம்ப நிலையிலேயே பக்கவாட்டில் வளைவுடன் ஒரே திசையில் வளர்ந்து வர வழி வகுத்துள்ளனர் என இந்த யூனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காடு வளர்ப்பவர்களின் இச்செயலால், இம்மரங்களில் உண்டாகும் இயற்கையான வளைவுப் பகுதிகள், பிற்காலத்தில், வளைவான ஆடும் நாற்காலி போன்ற மரச் சாமான்கள், பனிச் சறுக்கு (Sledge) வண்டிகள் மற்றும் கப்பலில் சில பாகங்களை சுலபமாக உருவமைப்பதில் உதவி புரிந்தனவென்றும் அவர்கள் கூறுகின்றனர்.
'J' வடிவில் உருவாகும் இப்பகுதியை, தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் பழக்கத்தை, 1939 ல் போலந்து நாட்டின் மீது படையெடுத்து வந்த 'நாசி' (Nazis) இனத்தினர் பின் தள்ளியதாக கூறப்படுகிறது. அந்த நேரங்களில் செயற்கையாக்கப் பொருள்கள் (Synthetic products) கண்டுபிடிக்கப்படாமலும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டில் இல்லாமலும் இருந்த நிலை. 'J' வடிவில் கிளைகளை உருவாக்கவும், பின் அவற்றை தொழிற்சாலைகளில் பயன்படுத்தவும் அறிந்திருந்த அக்கால மக்கள், அத்தொழில் நுட்பத்தை எங்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதும், பின் போர் உருவாகி விஸ்வரூபமெடுத்தபோது அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு அல்லது இடம் பெயர்ந்து, மொத்தமாக காணாமற் போய்விட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.
இந்த ஒரே மாதிரியான வளைவுகள் தொடர்ந்து நிலைத்திருப்பது, தடைபட்ட, கற்பனைக்கு அப்பாற்பட்ட மனிதக் கைவினைப் பணிக்கு ஒரு உயிரோட்டமுள்ள சாட்சியாக உள்ளது.
மனித நோக்கமும், தன்னம்பிக்கையும், நம்ப முடியாத தாவரவியல் முரண்பாடுகளுடன் கலந்துவிட்டதாக இது காட்டுகிறது. இந்த அதிசயமான தாவர விசித்திரம், மனிதர்களின் முயற்சிகள் போர்களால் தடைபட்ட ஒரு வரலாற்றுக் கணத்தைப் பதிவு செய்கிறது. இயற்கை, இழந்துவிட்ட ஒரு தொழில்துறை வடிவமைப்பை நிரந்தரமாக பிரதிபலிக்கிறது.
இம்மரங்கள் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாமல் வளர்கின்றன என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படச் செய்கிறது. இந்த நானூறு மரங்கள் உள்ள வனப்பகுதியை Gryfino மாவட்ட அதிகாரிகள், இயற்கையில் உண்டான ஒரு நினைவுச் சின்னமாக வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். மேலும், அவர்கள் அதே போன்ற மற்றொரு கோணல் மரக்காட்டை அப்பகுதியில் உருவாக்கவும் முயற்சித்து வருகின்றனர். மர்ம முடிச்சி அவிழ்க்கப்பட்டால் மனித குலத்திற்கு வெற்றிதானே!