

கடலின் இருண்ட, ஆக்சிஜன் குறைந்த ஆழமான பகுதிகளில் வாழும் வாம்பையர் ஸ்க்விட் (Vampire squid) ஒரு விசித்திரமான தலைக்காலியாகும் (Cephalopod). 8 கைகள் கொண்டது. நீல நிற பெரிய கண்களைக் கொண்டது. இது ஒரு உண்மையான ஸ்க்விட் அல்ல. ஆனால், அதன் தனித்துவமான அம்சங்களுக்காக ‘நரகத்திலிருந்து வரும் வாம்பையர் ஸ்க்விட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு 8 கைகளுடன் ஆக்டோபஸ் போல இருந்தாலும், அதன் மரபணுக்கள் ஸ்க்விட் மற்றும் கட்டல்பிஷ் (Cuttlefish) போன்ற உயிரினங்களுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
தோற்றம்: இதன் அறிவியல் பெயர் Vampyroteuthis infernalis. இது கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் கண்கள் நீல நிறத்தில் மின்னும் தன்மை கொண்டவை. உடலின் அளவோடு ஒப்பிடுகையில், விலங்கு உலகிலேயே இதற்குத்தான் மிகப்பெரிய கண்கள் உள்ளன. கைகளுக்கு இடையே வலை போன்ற அமைப்பு காணப்படும். வாம்பையர் ஸ்க்விட் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் (1 அடி) நீளம் வரை வளரும். ஆக்ஸிஜன் குறைவாக உள்ள இருண்ட ஆழமான கடற்பகுதிகளில் (சுமார் 2000 முதல் 3000 அடி) வாழ்கிறது.
தற்காப்பு: ஆபத்து நேரும்பொழுது, இது தன்னைத்தானே உள்பக்கமாக மடித்துக்கொண்டு, தனது கைகளை தலைகீழாக மடித்துக் கொண்டு, கைகளில் உள்ள கூர்மையான முட்கள் போன்ற அமைப்புகளை வெளியே தெரியும்படிக் காட்டி 'பைனாப்பிள்' வடிவில் மாறிக்கொள்ளும். ஒளிரும் எச்சில் போன்ற திரவத்தை வெளியேற்றி எதிரிகளை திசை திருப்பும். அதாவது, ஆபத்து ஏற்படும்பொழுது தனது கைகளை உடலைச் சுற்றி மடித்து ஒரு குடை போல அமைத்துக் கொள்ளும். மேலும், இருட்டில் ஒளிரும் (bioluminescence) திறனையும் பயன்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்ளும்.
இது ஸ்க்விட் அல்லது ஆக்டோபஸ் வகையைச் சேர்ந்ததல்ல. தனித்துவமான ஒரு உயிரினமாகும். இதன் உடல் ஜெலட்டினால் ஆனது. மிதக்கும் தன்மை கொண்டது. மேலும், இதன் வளர்சிதை மாற்றம் மிக மெதுவாக இருப்பதால், குறைந்த உணவைக் கொண்டு நீண்ட காலம் இதனால் வாழ முடிகிறது.
இது மற்ற வாம்பையர் போல் இரையை வேட்டையாடுவதில்லை. மேலே இருந்து விழும் அல்லது கடலில் மிதக்கும் இறந்த பிளாங்க்டன்கள் மற்றும் கரிமப் பொருட்களை (Marine Snow) உண்டு வாழ்கிறது.
வாம்பையர் ஸ்க்விட் என்பது அதன் மிரட்டும் தோற்றத்தால் இப்பெயர் பெற்ற ஒரு ஆழ்கடல் உயிரினமாகும். ஆனால், அதன் வாழ்க்கை முறை பயங்கரமானது அல்ல. மாறாக, அதன் சூழலுக்கு ஏற்ற தனித்துவமான தகவமைப்புகளுடன் அமைதியாக வாழ்கிறது.