என்னதான் இன்றளவும் பெண்கள் மத்தியில் பட்டுப்புடவை மோகம் அதிகமாக இருந்தாலும், ஒரு பட்டுப் புடவை தயாரிக்க பல்லாயிரக்கணக்கான பட்டுப்புழுக்கள் கொல்லப்படுவது மனிதாபிமானமற்ற செயல்தான் . எனவே இந்த முறையை மாற்றி, பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே பட்டுப்புடவை உருவாக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது ஒடிஸா அரசாங்கம்.
பட்டுப்புழுக்களில் இருந்து பட்டு நூல்களை பிரித்தெடுக்கும் முறையை ‘ஃபில்மெண்ட் சில்க்’ எனக் கூறுவார்கள். இந்த முறையில் பட்டுப்புழுக்கள் உருவாகி இருக்கும் கூட்டை வெந்நீரில் வேகவைத்து, அவற்றைக் கொன்று, பட்டு நூல்களின் இழைகளைப் பிரித்தெடுப்பார்கள். அதன் பிறகு இந்த நூல்களைப் பயன்படுத்தி பட்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பட்டுப் புடவை தயாரிப்பதற்கும் சராசரியாக 20000 பட்டுப்புழுக்கள் வரை கொல்லப்படுகிறது. அப்படியானால் தயாரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான பட்டுப் புடவைகளுக்காக எத்தனை லட்சம் பட்டுப்புழுக்கள் கொல்லப்பட்டிருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்.
இந்த பட்டுப் புழுக்களை கொல்லாமல் பட்டு நூல்களைப் பிரித்து எடுப்பதற்கு ‘கருணா சில்க்’ எனும் முறையை பயன்படுத்துகிறது ஒடிசா அரசு. அதாவது பாரம்பரியமான பட்டு உற்பத்தியில், பட்டுப்புழுக்கள் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்பே கூட்டிலேயே வெந்நீர் ஊற்றி கொள்ளப்படும். ஆனால் இந்த புதிய முறையில் பட்டுப்புழுக்கள் அந்து பூச்சிகளாக வெளியேறியதும், அதில் கிடைக்கும் நார்களைப் பயன்படுத்தி தேவையான பட்டு நூல்களை தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த முறையில் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகப்படியான பட்டு நூல் கிடைக்காது என்றாலும், பட்டுப் புடவை தயாரிப்பதற்காக தேவை இல்லாமல் லட்சக்கணக்கில் கொல்லப்படும் பட்டுப் புழுக்களின் உயிர் இதனால் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டுப்புழுக்களை காக்கும் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.
பட்டுப்புழுவை கொல்லாமல் பட்டு உற்பத்தி செய்யும் இந்த முறையை, பட்டுப்புழு விவசாயம் செய்வோரும், சமூக ஆர்வலர்களும் வரவேற்கின்றனர். மக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.