உங்கள் வீட்டு ரோஜா செடி பூத்துக் குலுங்க எளிய யோசனை!

உங்கள் வீட்டு ரோஜா செடி பூத்துக் குலுங்க எளிய யோசனை!

வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் என எதை எடுத்துக்கொண்டாலும் நமது மனதில் முதலில் தோன்றும் செடி எதுவென்றால் அது ரோஜா செடியாகத்தான் இருக்கும். பூத்துக் குலுங்கும் ரோஜா செடிகளைக் கண்டாலே மனதுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். பொதுவாக, ஏதாவது ஒரு நர்சரியிலிருந்து ரோஜா செடியை வாங்கி வைத்தாலோ அல்லது ரோஜா செடியைப் பதியம் செய்தாலும் ஒன்று இரண்டு மொட்டுக்களைத் தவிர, அதிக மொட்டுக்கள் வைப்பதை எதிர்பார்க்க முடிவதில்லை. ஒரு ரோஜா செடியை வாங்கி அதைப் பதியம் செய்து அதற்குத் தேவையான உரங்கள் இட்டு, ரோஜாக்கள் பூத்துக் குலுங்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலில் ரோஜா செடி வாங்கும்பொழுது பெரிய செடியாகவும் நிறைய கிளைகள் இருக்கும் செடியாகவும் பார்த்து வாங்க வேண்டும். இலைகளில் எந்த ஒரு பூச்சிகளும் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். தோட்ட மண்ணையும் கோக்கோ பீட்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு கையளவுக்கு மண்புழு உரம் சேர்ந்த கலவையை நன்றாக கலந்து விட்டு தொட்டியில் சேர்க்கவும். மண் நிரப்பிய தொட்டியின் நடுவில் நன்றாக குழியைப் பறித்து வாங்கி வந்த ரோஜா செடியை அந்தச் செடியுடன் கூடிய மண்ணுடன் சேர்த்து நட்டு விடவும். காலை, மாலை இரு வேளைகளும் தண்ணீர் விடவும். ஒரு வாரம் கழித்து நாம் நட்டு வைத்த ரோஜா செடிக்கு வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு பழக்கரைசலை பின்வருமாறு தயாரித்து வாரம் ஒருமுறை சேர்க்கலாம்‌. இந்தப் பழக்கரைசலை சேர்த்த பத்தே நாட்களில் அந்த ரோஜா செடியின் ஒரே கிளையில் 10 முதல் 12 மொட்டுக்கள் கூட விடும். இனி, பூச்செடிக்களுக்கானப் பழக்கரைசல் தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: வாழைப்பழத் தோல் - 4, டீத்தூள் - 1 மேஜைக் கரண்டி, வெங்காயத் தோல் - மூன்று வெங்காயத்திலிருந்து எடுக்கப்பட்ட தோல், தண்ணீர் - அரை லிட்டர்.

செய்முறை: அரை லிட்டர் தண்ணீருடன் வாழைப்பழத் தோலை சிறிய துண்டுகளாக நறுக்கி டீத்தூள் மற்றும் வெங்காயத்தோல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த கரைசல் உள்ள பாத்திரத்தை ஒரு தட்டு கொண்டு மூடி வைத்து ஆறவிடவும். 24 மணி நேரம் கழித்து கரைசலை நன்கு வடிகட்டி இத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒவ்வொரு ரோஜா செடிக்கும் 200 மில்லி வீதம் விடவும்.

குறிப்பு: இந்தப் பழத்தோல் கரைசலை ரோஜா செடிக்கு மட்டுமல்லாது, அனைத்து பூச்செடிகளுக்கும் உபயோகிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com