

தூக்கம், மனிதர்களுக்கும் மூளை வளர்ச்சி அடைந்த விலங்குகளுக்கும் மட்டுமே சொந்தமான ஒரு விஷயம் என்றுதான் நாம் இத்தனை காலமாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவுகள் இந்த எண்ணத்தை சுக்குநூறாக உடைத்துள்ளன.
மூளை என்ற உறுப்பு பரிணாம வளர்ச்சியில் உருவாவதற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தூக்கம் என்ற ஒன்று பூமியில் தோன்றிவிட்டது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சி!
இதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் கையில் எடுத்தது கடலில் வாழும் இரண்டு விசித்திரமான பழமையான உயிரினங்களைத்தான். ஒன்று தலைகீழாக நீந்தும் ஜெல்லிமீன் (Jellyfish), மற்றொன்று கடல் சாமந்தி (Sea Anemone). இந்த இரண்டு கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கு இருப்பதுபோல ஒரு மைய மூளை அமைப்பே கிடையாது. உடலெங்கும் பரவியுள்ள ஒரு சாதாரண நரம்பு வலை மட்டுமே உண்டு.
ஆனாலும் இவை நம்மைப் போலவே நேரம் தவறாமல் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. இவை தூங்கும்போது இவற்றின் அசைவுகள் முற்றிலும் குறைந்துவிடும். யாராவது தொட்டாலோ அல்லது வெளிச்சம் பட்டாலோ உடனே எந்த ஒரு எதிர்வினையும் காட்டாது. அதுமட்டுமில்லாமல், இவை தூங்கும்போது நாம் தொந்தரவு செய்து எழுப்பிவிட்டால், அந்தத் தூக்கத்தை ஈடு செய்ய அடுத்த நாள் மிக நீண்ட நேரம் ஆழ்ந்து தூங்குகின்றன.
ஜெல்லி மீன்கள்!
இந்த உயிரினங்கள் தங்களின் தூக்கத்தை எப்படி முறைப்படுத்துகின்றன என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம். ஜெல்லிமீன்கள் முழுமையாக வெளிச்சத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. இரவு வந்ததும் தூங்கச் செல்லும் இவை, பகலில் சுறுசுறுப்பாகவும், நன்பகல் வேளையில் ஒரு குட்டித் தூக்கமும் போடுகின்றன. வெளிச்சம் தான் இவற்றின் அலாரம் போலச் செயல்படுகிறது. இருட்டில் வைத்தால் இவற்றின் நேரம் மொத்தமாக மாறிவிடுகிறது.
கடல் சாமந்திகள்!
இவை தங்களுக்குள் உள்ள ஒரு உயிரியல் கடிகாரத்தைப் பயன்படுத்தித் தூக்கத்தை நிர்வகிக்கின்றன. விடியற்காலையிலும் மாலையிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவை, தங்களின் உடற்கடிகாரத்தின்படி ஓய்வெடுக்கின்றன. இவை இரண்டுக்கும் நேரங்கள் மற்றும் வாழும் சூழ்நிலைகள் மாறுபட்டாலும், தங்களின் ஒரு நாள் பொழுதில் மூன்றில் ஒரு பங்கைத் தூக்கத்திற்காகவே கட்டாயம் ஒதுக்குகின்றன.
டிஎன்ஏ!
மூளையே இல்லாத இந்த உயிரினங்களுக்குத் தூக்கம் எதற்குத் தேவைப்படுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். இங்குதான் இயற்கையின் மாபெரும் ரகசியம் ஒளிந்துள்ளது. நாம் விழித்திருக்கும் நேரத்தில் நமது செல்களில் உள்ள டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் அதிக அளவில் சேதமடைகின்றன. இந்தச் சேதங்களைச் சரிசெய்யும் முக்கிய வேலையைத் தூக்கம் மட்டுமே செய்கிறது.
இந்த உயிரினங்களை விஞ்ஞானிகள் தூங்க விடாமல் தடுத்தபோது, அவற்றின் உடலில் டிஎன்ஏ சேதம் பல மடங்கு அதிகரித்தது. புறஊதாக் கதிர்கள், சில ரசாயனங்கள் மூலம் அவற்றின் மரபணுக்களைச் சேதப்படுத்தியபோது, அந்தச் சேதங்களைச் சரிசெய்துகொள்ள அவை வழக்கத்தை விட அதிகமாகத் தூங்கின. மெலடோனின் என்ற ஹார்மோனை வெளியிலிருந்து செலுத்தியபோதும் அவை ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று தங்களைக் குணப்படுத்திக் கொண்டன.
இந்த ஆராய்ச்சியின் மூலம் ஒரு விஷயம் உலகிற்கு மிகத் தெளிவாகப் புரிகிறது. தூக்கம் என்பது நினைவாற்றலை வளர்க்கவோ அல்லது சோர்வைப் போக்கவோ இயற்கை மனிதர்களுக்குக் கொடுத்த ஒரு சொகுசு வசதி கிடையாது. பல கோடி ஆண்டுகளாகச் சூரிய ஒளி, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் புறஊதாக் கதிர்களால் உடலில் ஏற்படும் தினசரி செல் சேதங்களைச் சரிசெய்ய உயிரினங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு மிக முக்கியமான மருத்துவக் கருவிதான் இந்தத் தூக்கம்.