புகையில்லா போகி பண்டிகை, இயற்கையின் ஆரோக்கியம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாணவர்களிடம் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாகவும். புதிய உணர்வு, புதிய தொடக்கத்தை முன்னெடுக்கும் நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. இப்படி ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் போகிப் பண்டிகையில் புதிய தொடக்கத்தை ஆரம்பிப்பதற்காக பெரும்பான்மையான மக்கள் பழைய பொருட்கள், தேவையற்ற பொருட்களை எரிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாட்டில் காற்று மாசு அதிக அளவில் காணப்படுவதாக தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.
மேலும் போகிப் பண்டிகை நாளில் தமிழ்நாட்டில் நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், சுவாச பிரச்சனை மக்களிடம் அதிகம் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சைகளை மக்கள் அதிகம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு போகிப் பண்டிகை அன்று ஏற்பட்ட புகை மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட வரலாறும் உண்டு.
போகிப் பண்டிகை அன்று மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், துணிகள், ரப்பர் பொருட்கள், காகிதங்கள் போன்றவற்றை எரிப்பதை குறைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ள விழிப்புணர்வு காரணமாக காற்று மாசு அளவு குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்ற ஆண்டு சென்னை பகுதிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது வளசரவாக்கத்தில் காற்று மாசு குறியீடு 277 என்ற அதிகபட்ச அளவில் இருந்ததாகவும், அண்ணா நகர் பகுதியில் 141 என்ற மிதமான அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைவான அளவு தான் என்றாலும் இவற்றையும் குறைக்க வேண்டும் என்றும், அதே சமயம் சென்ற ஆண்டு போகி அன்று 81.7 டன் குப்பைகள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.