ஸ்காட்லாந்து, பிரிட்டன் மற்றும் ஜப்பானில் கருப்புப் பூனைகள் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் கருப்புப் பூனைகள் கெட்ட சகுனத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பல்வேறு கலாசாரங்களில் மூட நம்பிக்கைகளுடன் கட்டுக்கதைகளுடன் தொடர்புடையவைகளாக இருக்கின்றன.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அக்டோபர் 27ம் தேதி அன்று தேசிய கருப்புப் பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் கருப்புப் பூனைகளைப் பற்றிய சில எதிர்மறையான கருத்துக்களை அகற்றும் வண்ணமும் அதைப் பற்றிய நேர்மையான எண்ணங்களை விதைக்கும் எண்ணமும் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
கருப்புப் பூனைகளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:
மரபணு பின்னணி: கருப்புப் பூனைகளின் உடலில் அடர்த்தியான கருப்பு நிறம், கோட் போல அவற்றின் உடலைத் தழுவியுள்ளன. பூனைகளுக்கு கருப்பு நிறம் வருவதற்கான காரணம் மரபணுக்கள். அவை பிற நிறங்கள் உற்பத்தியாவதைத் தடுத்து கருப்பு நிறத்தை உடல் முழுவதும் வழங்குகிறது.
கண் நிற மாறுபாடு: கருப்புப் பூனைகள் மஞ்சள், பச்சை, தாமிரம் மற்றும் நீலம் உள்ளிட்ட பல்வேறு கண் வண்ணங்களை கொண்டிருக்கின்றன. அவற்றின் இரண்டு பிரகாசமான கண்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது. சில நாடுகளில் அவை தீய சக்திகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன.
பாசமுள்ள இயல்பு: பல கருப்புப் பூனைகள் அவற்றின் நட்பு மற்றும் பாசமுள்ள ஆளுமைகளுக்கு பெயர் பெற்றவை. அவை பெரும்பாலும் மனிதத் தோழமையை விரும்புகின்றன. அவற்றின் உரிமையாளர்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்குகின்றன.
வேட்டையாடும் குணம்: இருட்டைப் போர்த்தியது போல இருக்கும் இவற்றின் உடல் அமைப்பால் குறைந்த வெளிச்சத்தில், விடியற்காலையிலும் இரவிலும் அவற்றால் திறமையாக வேட்டையாட முடிகிறது.
ஆரோக்கியம்: கருப்பு பூனைகள் மற்ற நிறங்களைக் கொண்ட பூனைகளை விட குறைவான ஆரோக்கியம் கொண்டவை என்று தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் இந்த கருப்பு நிறம் பூனையின் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. இவற்றின் நிறம் காரணமாக இந்த கருப்புப் பூனைகளை தத்தெடுப்பது குறைவாகவே நடக்கிறது. இதனால் இவற்றின் எண்ணிக்கை தெருக்களில் அதிகமாக இருக்கிறது. தத்தெடுப்பை ஊக்குவிக்க பல்வேறு பிரச்சாரங்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் செய்கிறார்கள்.
கலாசார மாறுபாடுகள்: சில கலாசாரங்களில் கருப்புப் பூனைகள் கொண்டாடப்பட்டு பாதுகாப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் சின்னங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஜப்பானிய கலாசாரத்தில் கருப்புப் பூனைகள் அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, தனியாக வாழும் பெண்களுக்கு. சில நாட்டுப்புற கதைகளில் கருப்புப் பூனைகள் சந்திரன் மற்றும் பிற தெய்வங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன.
நுண்ணறிவு: எல்லாப் பூனைகளையும் போலவே கருப்பு பூனைகளும் புத்திசாலிகளாகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கின்றன. தந்திரங்களை கற்றுக் கொள்கின்றன. விளையாட்டுத்தனமாகவும் ஆர்வத்துடனும் இருக்கின்றன. கருப்பு பூனைகள் ஒரு தனித்துவமான அழகைக் கொண்டுள்ளன. அதனால் அவை சிறப்பு தோழர்களை உருவாக்குகின்றன
நேர்மறையின் அடையாளம்: கருப்புப் பூனைகள் குறித்து நிறைய கட்டுக்கதைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் பல உண்மையில் நேர்மறையானவை என்பதை சுட்டிக்காட்டுவதே கருப்புப் பூனைகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் ஆகும். உதாரணமாக, பாய்மரக் கதையில், ஒரு கப்பலில் ஒரு கருப்புப் பூனைக்குட்டி இருப்பது கடல் மற்றும் காற்று இரண்டையும் அமைதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.