அகழ்வாரைத் தாங்கும் நிலம்.. இன்று சர்வதேச புவி தினம்!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்.. இன்று சர்வதேச புவி தினம்!

-ஜி.எஸ்.எஸ்.

வ்வொரு வருடமும் ஏப்ரல் 22-ம் தேதி 'உலக அன்னை பூமி தினமாக' கொண்டாடப்படுகிறது.

ஆனால் நமது அன்னை பூமி 'நீங்கள் என்னை கொண்டாட வேண்டாம்.   மேலும் மேலும் பாழ்படுத்தாமல் இருந்தாலே போதும்' என்று கதறினால் வியப்பில்லை.  அந்த அளவுக்கு நமது செயல்பாடுகளால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பூமிக்கு நாம் ஊறு விளைவித்துக் கொண்டே இருக்கிறோம்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி கேலார்டு அன்டன் நெல்சன்.  இவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, சுற்றுப்புற சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர்.  இவர்தான் ஏப்ரல் 22, 1970 அன்று உலகை சூழ்ந்துள்ள பிரச்னைகள் குறித்தும் சுற்றுப்புறச் சூழலின் அபாயங்கள் எந்த அளவு உலகை பாதித்துக் கொண்டிருக்கிறது என்பது குறித்தும் மிக ஆழமாகப் பேசினார்.  அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி இதை அங்கீகரித்தார்.  அப்போதிலிருந்து ஏப்ரல்-22 என்பது உலக அன்னை பூமி தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

அப்போது மாணவர்களின் பெரும்பகுதியினர் போருக்கு எதிராக ஒன்று திரளத் தொடங்கியிருந்தனர்.  அவர்களுக்கு இடையே காற்று மற்றும் நீர் எந்த அளவு பாதிப்படைந்து கொண்டிருக்கிறது என்பதை நெல்சன் விவரித்தார். இதைத் தொடர்ந்து உலகை மாசடையச் செய்யும் செயல்களுக்கு  எதிரான இயக்கத்தையும் மாணவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

 முக்கியமாக கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா என்ற கடற்பகுதியில் காணப்பட்ட பெருமளவு பெட்ரோலியக் கழிவுகள் கடல் நீரையும் நீர் வாழ் உயிரினங்களையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது குறித்து நெல்சன் விளக்கியது பலரது மனதிலும் தைத்தது.'அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை' என்கிறது திருக்குறள்.   அன்னை மிகப் பொறுமை காக்கிறாள்.  அதை அளவுக்கதிகமாக சோதித்தால் ஆபத்து அவளுக்கல்ல, நமக்குதான்.

உலகின் பூமிக்கான மிக முக்கியமான தற்கால அச்சுறுத்தல்கள் என்று சிலவற்றை குறிப்பிடலாம்.   அவை காற்று நச்சடைதல். உலக வெப்பமயமாதல், வெகு வேகமாக அதிகரிக்கும் மக்கள் தொகை, கழிவுகளை சரியாக மேலாண்மை செய்யாமல் இருப்பது, கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பது, காடுகளை அழிப்பது, ஓசோன் படலம் பாதிக்கப்படுவது, நல்ல குடிநீர் கிடைக்காமல் இருப்பது, அமில மழை எனலாம்.

ஒவ்வொன்றையும் குறித்து ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால் அவற்றை குறைப்பதற்காகவும் தவிர்ப்பதற்காகவும் நடைமுறையில் என்னென்ன நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து இருக்கின்றன என்றால் அவை மிகக் குறைவாகவே உள்ளன.

தொழில்துறை முன்னேறினால் தான் நாட்டின் வறுமை குறைய முடியும், நவீன உலகத்துக்கு (பசுமை வாயுவை அதிகம் வெளிப்படுத்தினாலும்) நவீன சாதனங்கள் தேவைப்படுகின்றன, நகரமயமாக்கலின் காரணமாக காடுகளை அழித்து வீடுகளை கட்டுவது இன்றியமையாதது என்றெல்லாம் பல காரணங்களை முன்வைத்து நாம் தொடர்ந்து பூமியே ஆபத்துக்கு உள்ளாக்குகிறோம்.

அதிகாரமும் மனம் உள்ளவர்கள் மேற்படி ஆபத்துகள் பூமியைச் சூழ்ந்து இருப்பதை உணர்ந்து பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கலாம்.

சாமானியர்களுக்கு இதோ சில எளிமையான ஆலோசனைகள்.

  • பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.
  • மரங்களை வெட்டாமல் இருக்கலாம். முடிந்தால் ஒரு மரத்தையாவது நடுங்கள்.
  • மிக அவசியமான விஷயங்களை தவிர மற்றவற்றுக்கு பூமியைத் தோண்ட வேண்டாம்.
  • வாகனம் நச்சுப் புகையை வெளியிட்டு கொண்டிருந்தாள் அதை உடனே சரி செய்யுங்கள்.
  • உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு பூமியைக் காப்பது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.
  • தண்ணீரையும் மின்சாரத்தையும் சிறிதும் வீணாக்க வேண்டாம்.
  • வேண்டாத பொருட்களை, முக்கியமாக ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய பொருட்களை, வாங்குவதை மிகவும் குறைத்துக் கொள்ளுங்கள்.
  • குண்டு பல்புக்கு பதிலாக எல்இடி பல்புகளைப் பயன்படுத்துங்கள்
  • அருகில் உள்ள இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள்.

இவற்றையெல்லாம் செய்தால் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆறும்.  அதுதான் உண்மையான சர்வதேச பூமி தினமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com