
மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோட்டம் மலைப்பாதை வழியாக சாப்டூர் சதுரகிரி கோயிலுக்கு சென்ற மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் அந்த பகுதியில் முதன் முறையாக 'இலங்கை ஐந்து வளையன்' என்கிற அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். இது, இலங்கை மற்றும் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய உயிரினமாகும்.
சிங்கள பட்டாம்பூச்சி என்பது "Ypthima singala" என்ற பட்டாம்பூச்சி இனத்தை குறிக்கிறது, இது இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் காணப்படுகிறது. இது Satyrinae பட்டாம்பூச்சி இனத்தைச் சார்ந்தது, மேலும் இதற்கு "நகை நான்கு வளையம்" அல்லது "சிங்கள ஐந்து வளையம்" என்றும் பெயர் உண்டு.
இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் காணப்படும் இவற்றில் ஆண் மற்றும் பெண் வேறுபாடுகள் உண்டு ஆண்: இரண்டு இறக்கைகளின் முதுகுப் பகுதி பழுப்பு நிறமாக இருக்கும், முன் இறக்கையின் வென்ட்ரல் மேற்பரப்பில் பெரிய கண் புள்ளி மற்றும் சிறிய கண் புள்ளிகளின் தொடர் இருக்கும். பெண்: முன் இறக்கையின் பின்புற மேற்பரப்பில் ஒரு முக்கிய கண் புள்ளி இருக்கும்.
இந்த வண்ணத்துப்பூச்சி புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. கோவை, ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் மற்றும் தேனி மேகமலை வனப்பகுதியில் ஏற்கனவே இலங்கை ஐந்து வளையன் வண்ணத்துப்பூச்சி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.
சதுரகிரி மலைப்பாதையில் கடந்த பிப்ரவரியில் மஞ்சள் கறுப்புச் சிறகன், வரி ஐந்து வளையன், மலபார் புள்ளி இலையொட்டி, சிறு கருமஞ்சள் துள்ளி, மர பழுப்பன், பெருங்கண் புதர் பழுப்பு உள்ளிட்ட 52 வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சதுரகிரிமலை ஆன்மிகத்தலம் மட்டுமல்ல, பல்லுயிரிய வளம் நிறைந்த பசுமைத்தலம். மதுரை மாவட்டத்தில் இதுவரை 164 வகை வண்ணத்துப் பூச்சிகளை மதுரை இயற்கைப் பண்பாட்டுக் குழுவினரால ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர்.
இந்த மாதிரியான ஆராய்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளின், இயல் தாவரங்களின் மற்றும் சுற்றுச்சூழலின் தொடர்பை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் புரிந்துகொள்ள உதவும். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, மதுரையில் இயல் தாவர வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவை அமைக்க வேண்டும் என மதுரை கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.