
நவம்பர், டிசம்பர் என்று வந்துவிட்டால் பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாம் தாண்டி ஒரு வித கலக்கம் தான் அனைவரின் உள்ளும் எழும். காரணம் அது தான் மழை காலத்தின் உச்ச நிலை. இந்நேரங்களில் இயற்கையாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை சில நேரங்களில் புயலாய் மாறுபட்டு நம்மை ஒரு ஆட்டு ஆட்டி விடும். ஆனால் இதை நாம் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு முறை தான் எதிர்கொள்கிறோம். இதுவே அது தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
எந்தெந்த இடங்கள் அதிக புயல்களை எதிர்கொள்கின்றன:
சூறாவளிகள் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். இது கடந்து போகும் பாதைகளில் பல பேரழிவைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அடர்த்தியான கடலோர பகுதிகள் மற்றும் அங்குள்ள குறைந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடுகள், வெப்பமண்டல சூறாவளிகளால் (tropical cyclones) அதிகம் பாதிப்படைகின்றன. அதில் பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை அடங்கும். அவை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 சூறாவளிகளை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக குறிப்பிடத்தக்க உயிர் சேதங்கள் மற்றும் சொத்து இழப்பு ஏற்படுகிறது. இதேபோல் டொமினிகன் குடியரசு (Dominican Republic), ஹைட்டி(Haiti) மற்றும் கியூபா (Cuba) ஆகியவை கரீபியன் (Caribbean) பகுதிகளில் அமைந்துள்ளதால் அடிக்கடி சூறாவளிகளை அனுபவிக்கின்றன.
எதனால் இங்கு அதிக புயல்கள் வருகின்றன:
தொடர்ச்சியான சூறாவளி தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முதன்மையான காரணம், சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை. இது சூறாவளி உருவாக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதோடு காலநிலை மற்றும் வளிமண்டலத்தின் உறுதியற்ற தன்மை (atmospheric instability) அதிகரிப்பதன் மூலம், உருவாகும் புயல்கள் மேலும் வலுவாகின்றன. கூடுதலாக, பூமியின் காற்றின் திசை மற்றும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கோரியோலிஸ் விளைவு (Coriolis effect), சூறாவளி உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் எந்தெந்த இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன:
இந்தியாவில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சூறாவளிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை. இந்தியாவின் நீண்ட கடற்கரை பகுதிகள் தோராயமாக 8,041 கிமீ பரப்பளவை கொண்டது. இந்த இடங்களில் உலகின் சுமார் 10% வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகின்றன. மற்ற பிராந்தியத்தில் இருப்பதை போலவே காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை சூறாவளிகளை மேலும் தீவிரமாக்கி, இங்கு சில சேதங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் மனிதர்களால் அரங்கேறும் திட்டமிடப்படாத நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவு ஆகியவை சூறாவளியின் அளவுகள் மற்றும் தீவிரத்தின் அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.
இந்தியாவில் சூறாவளிகளின் தாக்கத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளில் மேம்பட்ட முன்னறிவிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சிறந்த பேரிடர் தயார்நிலை ஆகியவை சிறந்த முறையில் இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சில தீவிரமான சூறாவளிகளால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.
ஆக, சூறாவளிகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை அச்சுறுத்தும் ஒரு பெரிய இயற்கை அபாயமாகும். கால நிலை மாற்றங்கள் போன்ற சில காரணங்களால் இயற்கையாக நிகழும் இந்த பேரழிவுகளின் வீரியம் மாற்றம் காண்கின்றன.