Taipan: உலகிலேயே அதிக விஷமுடைய பாம்பு!

Taipan: World's most venomous snake.
Taipan: World's most venomous snake.

விஷப் பாம்புகள் என்று சொன்னாலே நமக்கு முதலில் தோன்றுவது கட்டுவிரியன்கள், நாகப்பாம்புகள் மற்றும் பயமுறுத்தும் பிளாக் மாம்பா போன்ற பாம்புகளின் உருவம்தான். ஆனால், நீங்கள் யாருமே அறியாத வகையில் ஆஸ்திரேலியாவின் காடுகளிலும், வறண்ட நிலப்பரப்புகளிலும் பதுங்கி இருக்கும் ஒரு பாம்புதான் உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. அதுதான் Inland Taipan.

எதிலும் இல்லாத விஷம்: Oxyuranus microlepidotus என அறிவியல் ரீதியாக அறியப்படும் இந்தப் பாம்பு, ஆஸ்திரேலியாவின் வறண்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இது அதிக விஷம் கொண்ட பாம்பாக இருந்தாலும் யார் கண்களிலும் படாதபடி தனித்து வாழும் குணத்துடன் இருக்கிறது. இதன் விருப்பமான வாழ்விடமாக பூமியின் பிளவுகள், மர பொந்துகள், எலி வளைகள் ஆகியவை உள்ளன.

இந்தப் பாம்பை வேறுபடுத்திக் காட்டுவது அதன் விஷத்தன்மைதான். பூமியில் உள்ள எந்த வகை பாம்புகளை விடவும், அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது இதன் விஷம். இதன் விஷம் முழுமையாக நீயூரோடாக்ஸின்களால் ஆனது. இது ஒருவரது உடலுக்குள் சென்றால் அவரின் நரம்பு மண்டலத்தை குறிவைத்து தாக்கி உடனடியாக பக்கவாதத்தை ஏற்படுத்திவிடும். இந்தப் பாம்பினால் கடிபட்டவர் உடனடியாக சிகிச்சை பெறவில்லை என்றால் மரணம் நிச்சயம். ஆனால், இந்த வகை பாம்பை மேலும் சுவாரசியமாக்குவது என்னவென்றால் அதன் பயந்த சுபாவம். இதன் விஷம்தான் கொடூரமானதே தவிர, இந்தப் பாம்புகள் அந்த அளவுக்கு ஆக்ரோஷமானது அல்ல. மிகவும் அரிதாகவே மனிதர்களின் கண்ணில் படும். ஒருவேளை மனிதர்களை இவை எதிர்கொண்டால் அவர்களை தாக்குவதைவிட தப்பி ஓடவே முயலும்.

Taipan பாம்புகளின் பண்புகள்: தைப்பான் பாம்புகளின் குறிப்பிடத்தக்க ஆலிவ் மற்றும் பழுப்பு நிறத் தோற்றம், வறண்ட பகுதிகள் மற்றும் பாலைவனச் சூழலில் தம்மை மறைத்துக்கொள்ள உதவுகிறது. அவற்றின் மெல்லிய உடல் மற்றும் சிறிய செதில்கள் வறண்ட நிலப்பரப்பில் சிறப்பான இயக்கத்துக்கு பங்களிக்கிறது. கடும் வெப்பமான பாலைவனச் சூழலில் இந்தப் பாம்பு எப்படி உயிர் வாழ்கிறது என நீங்கள் நினைக்கலாம். இவை பெரும்பாலும் சிறிய வகை விலங்குகள் மற்றும் பாலூட்டிகளை வேட்டையாடுகிறது. ஒரே கடியில் அதன் இரையை அசைய முடியாதபடி மாற்றும் சக்தி வாய்ந்த விஷத்தையும், அவை முறையாக செரிப்பதற்கான செரிமான அமைப்பையும் கொண்டுள்ளது. இதனால் அதன் உணவிலிருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெற முடிகிறது.

இந்தப் பாம்பின் விஷத்தைப் பற்றி நினைக்கும்போது நமக்கு பயம் ஏற்பட்டாலும், இவை யாருக்கும் எந்த இடையூறுமின்றி மறைந்திருந்து வாழ விரும்பும் இனமாகும். இதனால் ஒரு ஊர்வனவற்றின் அசாதாரண பண்பு மற்றும் வாழ்க்கை முறை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com