

கவிதை - கூட்டணியை முறிப்பாயா? கொள்கையுடன் நடப்பாயா?
கூட்டணியை முறிப்பாயா? கொள்கையுடன் நடப்பாயா?
மழையே உனக்குத்தான் மனவுறுதி கிடையாதா?
அக்கினி அனலிலே அல்லாடி நிற்கையிலே
பத்து ரூபாய்க்கே பரிதவித்துக் கிடந்தவனுக்கு
பத்துலட்சம் ரூபாய் பம்பரிலே விழுந்ததைப்போல்
உந்தன் வரவுகண்டு உதிரமும் குளிர்ந்திருந்தோம்!
செஞ்சுரி அடித்த கதிரவனின் இடத்திலெல்லாம்
சிக்சராய் அடித்துச் சிறப்பேற்படுத்தும் வீரனைப்போல்
பெய்தாய்!பெய்கிறாய்!பெய்வேனென்றும் காட்டுகிறாய்!
தனித்தே நீபெய்தால் தரணியே உனைவணங்கி
அரியணையாய் உளமாக்கி அதனிலே ஏற்றிவைக்கும்!
அரசியல் நிலைப்பாட்டை அடிக்கடி நீயெடுத்து
காற்றோடு கைகோர்த்து கஷ்டத்தை வழங்குகிறாய்!
கொள்கையற்ற கூட்டணிகள் குவலயத்தை ஆள்வதுபோல்
பறக்கும் காற்றுடனே நின்றுபெய்யும் நீயுந்தான்
கூட்டணி சேர்வதையே ஏற்கவே முடியவில்லை
எங்கள் விவசாயிகள் எவ்வளவு முயற்சிசெய்து
வாழையை வளத்துடனே வளர்த்தே வைத்தார்கள்!
பூவுடனே கச்சையாய் வளர்ந்துவரும் வேளையிலே
வாயுபகவான் வால்பிடித்து நீயும் வர
நொடியினிலே மரங்கள் நோகாமல் சாய்ந்திடவே
விழுந்தது மரங்களல்ல!விவசாயிகளின் மனங்கள்!
அவர்கள் உழைப்பையெல்லாம் அணுப்பொழுதில் வீணடிக்க
மாரியே நீயும் காற்றோடு கைகோர்த்ததனால்!
நலம் விளைக்கும் கூட்டணியே நானிலம்விரும்புவது
அதகளம் அதுசெய்தால் அப்படியே மறைந்துவிடும்!
வியாதியால் வாடினாலும் விரைந்தே மருந்தடித்து
எப்படியும் காப்பாற்றும் இயல்புடையோர் எம்மக்கள்!
நேரமே ஒதுக்காமல் நிம்மதிதனைக் குலைக்கும்
குதர்க்கத்தை நீயும் குறைமனிதர்களிடம் கற்றாயோ?
குடியானவனின் உழைப்பால்தான் குதித்தோடும் பசிக்கொடுமை
என்ற நிதர்சனத்தை எவரழிக்க இயலுமிங்கு!
மாரியே நீயும் வாயுவுடன் கூட்டணியை
இன்றே முறித்துவிடு!இயல்பான நல்மழையை
தொடர்ந்தே தந்துவிடு!தொழுவோம் உனையென்றும்!
உழைப்பின் பயனை உழைத்தோர் அனுபவிக்க
விடுதலே என்றும் விளைத்திடும் நல்பயனை!
மக்கள் வேண்டுமானால் மதிலாய்த் தடுத்திடலாம்
மாரியே நீயும் மகிழ்ந்ததனைச் செய்யலாமா?
இயற்கை நீ என்றும் இவ்வுலகை
வாழ்விக்க வந்த வரம்நிறைந்த நல்லவன்(ள்)நீ!
உந்தன் வரவால் உயர்வான இவ்வுலகம்
மேலும் உயரவேண்டும்!மேன்மைபெற்று இலங்கவேண்டும்!