விவசாயத்துறையில் நவீனத்தைப் புகுத்தும் முயற்சியாக விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன் வழங்க தமிழ்நாடு வேளாண் துறை முடிவு செய்திருக்கிறது. வேளாண் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும், விளைச்சலைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன் வழங்க தமிழ்நாடு வேளாண் துறை முடிவு செய்து இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘விவசாயத் துறையில் தற்போது நிலவும் பணியாட்கள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டும், கால சூழலுக்கு ஏற்ப விரைவாக விளைச்சலை மேற்கொள்ள வசதியாகவும், விவசாயிகளுக்கு இயந்திர கருவிகளை மானியத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ட்ரோன் மானிய விலையில் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும் மற்றும் விரைவான விளைச்சலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
மேலும், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கு ஏதுவாக முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ட்ரோன் கருவி வாங்க விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகள் குழுவாகவோ அல்லது தனி நபராகவோ ட்ரோனை இயக்க பயிற்சி பெற்று விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் சிறு குறு, ஆதிதிராவிடர், பெண் விவசாயிகளுக்கு ட்ரோனின் அடிப்படை விலையில் இருந்து 50 சதவீத மானியம் அல்லது 5 லட்ச ரூபாய் மானியம் அல்லது 4 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளாக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். ட்ரோன் வாங்குவதற்கு பயிற்சி பெற்று, உரிமம் பெறுவது அவசியம்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ட்ரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதைப் பயன்படுத்தி விவசாயிகள் ட்ரோன்களை மானிய விலையில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.