
பட்டாம்பூச்சி என்றாலே நம் அனைவர் மனதிற்குள்ளும் ஒரு மாதிரியான பரவசம் உண்டாகும். கதையில், காதல் வயப்பட்ட ஒரு ஆணின் நிலையை வர்ணிக்கையில் ஒரு எழுத்தாளர், "அவன் இதயத்தில் எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன" என்றெல்லாம் எழுதுவதுண்டு. பட்டாம்பூச்சிகள் பல வண்ணங்களில் உலகெங்கும் தேன் சுமக்கும் பூக்களை நாடி பறந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் மிக அழகிய 7 வகைப் பட்டாம்பூச்சிகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
1.ப்ளூ மார்ஃபோ பட்டர்பிளை (Blue Morpho Butterfly): சென்ட்ரல் மற்றும் சவுத் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது. இதன் இறக்கைகள் அளவில் பெரியதாக இருக்கும். அதில் வானவில்லில் இருப்பதுபோல் பல வண்ணங்கள் கலந்திருக்கும். வெளிச்சத்தில் அவை உமிழும் ஒளி கண்ணைக் கூச வைக்கும்.
2.பீகாக் பட்டர்பிளை (Peacock Butterfly): யூரோப்பிலும் ஆசியாவிலும் இது காணப்படுகிறது. இதன் இறக்கைகளில், மயிலிறகில் உள்ளதுபோல் கண்கள் போன்ற வடிவங்கள் உள்ளன. இறகில் உள்ள டிசைன் காரணமாகவே இதற்கு பீகாக் பட்டர்பிளை என்ற பெயர் வந்துள்ளது. இதன் வண்ணமும் வடிவும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து அங்கும் இங்கும் அலையச் செய்யும்.
3.மொனார்ச் பட்டர்பிளை (Monarch Butterfly): நார்த் அமெரிக்காவில் காணப்படும் பட்டர்பிளை. துடிப்பான ஆரஞ்சு நிறமும் கருப்பு நிறமும் கொண்ட இறக்கைகள் உடையவை. இடம் விட்டு இடம் பெயர நீண்ட தூரம் பறந்து செல்லும் திறமையுடையது.
4.கிளாஸ் விங் பட்டர்பிளை (Glass Wing Butterfly): மிக மென்மையான உடலமைப்பு கொண்ட இந்த வகை பட்டாம்பூச்சிக்கு ஒளி ஊடுருவக்கூடிய தன்மை கொண்ட கண்ணாடி போன்ற இறக்கைகள் உண்டு. 'கண்ணாடிச் சிறகி' என்றும் இதை அழைப்பதுண்டு. இவை சுற்றுப்புற சூழலுடன் ஒன்றிப்போக உதவுவது இயற்கையின் அற்புதம் என்றே கூறத்தோன்றுகிறது.
5.யுலிஸ்ஸஸ் பட்டர்பிளை (Ulysses Butterfly): இதை நாம் ஆஸ்திரேலியாவில் காணலாம். மிகவும் பிரகாசமான ப்ளு கலர் இறக்கைகள் உடையது. சூரிய ஒளியில் அவை திடீர் திடீரென மின்வெட்டுப் போல ஒளிரும் அழகிற்கு பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் அடிமை என்றே கூறலாம்.
6.எமரால்டு ஸ்வாலொவ் டைல் (Emerald Swallow Tail): சவுத் ஈஸ்ட் ஆசியாவில் காணப்படும் இந்த வகைப் பட்டாம்பூச்சி எமரால்டு க்ரீன் நிறத்தில் இறக்கைகளும், பின்புறம் சிறிய வால் போன்ற அமைப்புடன் கூடிய தோற்றமுடையது. இதன் திகைப்பூட்டும் நிறமும் மினு மினுப்பும் காண்போரைக் கட்டியிழுக்கும் ஆற்றல் உடையது.
7.ராஜன் ப்ரூக்ஸ் பேர்ட்விங் (Rajan Brooke's Birdwing): ராஜன் ப்ரூக்ஸ் என்ற பிரிட்டிஷ் சாகசக்காரர் ஒருவரின் பெயரைக் கொண்டுள்ளது இது. சுண்டியிழுக்கும் எலக்ட்ரிக் க்ரீன் நிறம் கொண்ட இந்த பட்டாம்பூச்சி கண்களைக் கூச வைக்கும் அழகுடையது.
மென்மையான உடலமைப்புடன், பலப்பல வண்ணங்களில் நம் மனதை மயக்கும் அழகுடன் உலகெங்கும் உலா வரும் பட்டாம்பூச்சிகளை இயற்கையின் உயிரோட்டம் உள்ள ஓவியம் என்றே கூறலாம்.