

நத்தைகளில் பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என மூன்று வகைகள் அமைந்துள்ளன. பொதுவாக நத்தைகள் இரவில் உணவைத் தேடி உண்பவை. அழுகும் கரிமப் பொருட்கள், பூஞ்சைகள், பச்சை இலைகள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகளின் கழிவுகள் முதலானவை இவற்றின் பிரதான உணவுகளாகும். மேலும் இவை அழுகும் தாவரப் பொருட்களை விரும்பி உண்ணுகின்றன.
பொதுவாக நத்தைகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் ஒரு உயிரினமாக இருந்தாலும் சில வகை நத்தைகள் மனிதர்களுக்கும் மறைமுகமாக தீங்கு விளைவிப்பவையாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நத்தை தான் ஆப்பிரிக்க நத்தை. மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் இந்த நத்தைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளுவோம்.
கிழக்கு ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ராட்சச ஆப்பிரிக்க நத்தைகள் லிசாசாட்டினா புலிக்கா (Lissachatina fulica) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவை உலகின் பெரிய நில நத்தைகளாகக் கருதப்படுகின்றன. ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த நத்தையானது இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா முதலான உலக நாடுகள் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் இவை பரவலாக காணப்படுகின்றன. பொதுவாக ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் செடிகள் அதிகமாக உள்ள பகுதிகளிலும் இவை அதிக அளவில் வாழ்கின்றன.
இயல்பிலேயே இவை பயிர்களை சேதப்படுத்தும் தன்மை உடையவை. மேலும் இவை தாவரங்களையும், கழிவுகளையும் உட்கொள்ளுகின்றன. இத்தகைய நத்தைகளில் இருபாலினத்திற்கான இனப்பெருக்க உறுப்புகள் அமைந்துள்ளன. இதனால் ஒரே ஒரு நத்தை இருந்தாலேயே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஒரே சமயத்தில் ஐநூறு முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. இவை பொதுவாக ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
இவை எலிகளின் கழிவுகளை உண்ணுவதன் காரணமாக இவை ஒட்டுண்ணிகளைக் கடத்தும் இயல்புடையனவாக உள்ளன. ஒட்டுண்ணிகளால் பாதித்த நத்தைகள் ஊர்ந்து செல்லும் போது அதன் உடல் பகுதியிலிருந்து வெளியேறும் நீரில் கலந்திருக்கும் தொற்றினை நாம் நத்தைகளைக் கையால் தொடும்போது ஒட்டிக் கொள்ளுகின்றன. எலி நுரையீரல் புழு (Rat Lungworm) முதலான ஒட்டுண்ணிகளை இவை பரப்புகின்றன.
ஒட்டுண்ணி பாதித்த நத்தையைத் தொட்ட கையை நம் மூக்கு, வாய் முதலான பகுதிகளைத் தொட்டால் நமக்கு பலவிதமான பாதிப்புகள் உடனடியாக ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. இதனால் நமக்கு காய்ச்சல், மயக்கம், குமட்டல் முதலான உடல் நலக்குறைவுகளும் மூளைக் காய்ச்சல் முதலான கொடிய வியாதிகளும் வர வாய்ப்புள்ளது. மூளை அழற்சியை (Brain Inflammation) ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளைப் பரப்பும் தன்மை உடையது.
இத்தகைய நத்தைகளை உங்கள் தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தும் போது கையுறைகளைப் பயன்படுத்தி ஜாக்கிரதையாக அப்புறப்படுத்துங்கள். எதிர்பாராதவிதமாக இத்தகைய நத்தைகளை கைகளால் தொட்டுவிட்டால் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. உடனடியாக சோப்புப் போட்டு கைகளை நன்றாக சுத்தம் செய்து விடவேண்டும்.
ராட்சச ஆப்பிரிக்க நத்தைகள் எட்டு அங்குலம் அளவிற்கு வளரக்கூடியவை. மிக விரைவில் பலபகுதிகளிலும் ஊடுருவும் உயிரினமாக இந்த நத்தை கருதப்படுகிறது. இவை உடலுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளைச் சுமந்து செல்லுபவை. இதன் மூலம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நோய்களைப் பரப்பும் ஒரு உயிரினமாக இந்த நத்தைகள் கருதப்படுகின்றன. எனவே, இத்தகைய நத்தைகள் உங்கள் தோட்டத்திற்குள் நுழைந்தால் அதை அலட்சியமாகக் கருதாதீர்கள்.