

ஏரி மற்றும் குளங்களில் அதிகமாகக் காணப்படும் ஆகாயத்தாமரைகள் வெளித்தோற்றத்தில் சாதாரணமாகவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவதாக இருந்தாலும் பல வகைகளில் நமக்குப் பயன் தருவதாக உள்ளது. மேலும், ஆகாயத்தாமரை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுவதோடு, இயற்கை விவசாயத்திற்கும் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, ஆகாயத்தாமரை நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் ஒரு தாவர இனமாகத்தான் கருதப்படுகிறது. அதேபோல், இது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஒன்றாகவும்தான் நாம் நினைத்திருப்போம். இப்படிப்பட்ட ஆகாயத்தாமரையை நாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றி, கேடுகளைக் குறைப்பதோடு, மக்கள் வருமானத்திற்கும் ஏற்ற ஒன்றாக மாற்றலாம். அந்த வகையில், ஆகாயத்தாமரையின் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. துணிகள் செய்ய உதவும் ஆகாயத்தாமரை: ஆகாயத்தாமரையின் இலைகளை மட்டும் பிரித்து பதப்படுத்தி துணிகள் செய்யலாம். இந்தத் துணிகள் வெகுநாட்கள் உழைக்கக் கூடியவை மட்டுமல்ல, மக்கும் தன்மை கொண்டதும் கூட.
2. கைவினைப் பொருட்கள்: குளங்கள், ஏரிகளின் அருகே வசிப்பவர்களுக்கு கவலை ஏற்படுத்துவது எதுவென்றால், அது ஆகாயத்தாமரையின் நீர் ஆக்கிரமிப்புதான். ஆனால், அந்த மக்கள் ஆகாயத்தாமரையைப் பயன்படுத்தி பல கைவினைப் பொருட்கள் செய்து விற்றால் தங்கள் வருமானத்தைக் கூட்டிக்கொள்வதோடு, நீர் நிலைகளையும் சுத்தம் செய்யலாம். ஆகாயத்தாமரையின் மூலம் கூடைகள், பைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை செய்யலாம். இவை கைவினைக்கலைஞர்களின் தொழிலை மேம்படுத்த உதவும்.
3. எரிபொருள் சக்தி: ஆகாயத்தாமரையை காற்றில்லா செரிமானம் (Aerobic digestion) மூலம் எரிபொருளாக மாற்றிக்கொள்ளலாம். இது புதைப்படிவ எரிப்பொருள் (Fossil fuel) பயன்பாட்டைக் குறைக்கிறது. ஆகாயத்தாமரையில் உள்ள வேர்கள், தண்டுகள் ஆகியவை நீரில் உள்ள சத்துக்களை வெகுவாக உரிஞ்சுகிறது. இதனால் நீரின் சத்துகள் ஆகாயத்தாமரையில் பரவி விடுகிறது. ஆகையால்தான் இவை எரிபொருளாகப் பயன்படுகின்றது.
4. நீர் சுத்திகரிப்பு: ஆகாயத்தாமரை நீரின் சத்துக்களை உரிஞ்சுவதோடு, நீரில் ஏற்படும் மாசுகளையும் சேர்த்து உரிஞ்சுகிறது. இதனால் இது நீரில் உள்ள மாசுகளை நீக்கி, நீர் தரத்தையும் பாதுகாத்து வருகின்றது.
ஆகாயத்தாமரையை ஒருமுறை வளர்ந்தால் போதும், சில காலங்களிலேயே குளம் முழுவதும் படர்ந்துவிடும். இதனால் நீரை ஆக்கிரமித்து விடுகிறது என்று மட்டுமே எண்ணி அதனை நீக்கி விடுகிறோமே தவிர, அதனுடைய பலன்களைப் பற்றி எண்ணுவதே இல்லை. ஆகாயத்தாமரைகளை நாம் மறுசுழற்சி முறையில் துணிகள், கைவினைப் பொருட்களாக மாற்றுவதோடு, உரமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்.