ஒலிமாசு என்கிறார்களே அப்படியென்றால் என்ன? கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு மாசு அது. காற்றில் மிதந்து வரும் ஒலி மிதமானதாக இருந்தால் அது சங்கீதம்; அதுவே அதிகமானால் இரைச்சல். அதாவது ஒலிமாசு!
தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், சந்தை, கடைத் தெருக்கள், வாகனங்கள் ஆகியவற்றால் ஏற்படும் இரைச்சல் உண்டாக்கும் பாதிப்புகள் மிக அதிகம். ஆனால் பொதுவாகவே போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் இரைச்சலை விட கடைத்தெருக்களில் மக்களின் பேச்சுதான் அதிகக் கூச்சலாக இருக்கிறது என்கிறார்கள்.
பொதுவாகவே நகரில் இரைச்சல் மிகுந்து விட்டது. மெதுவாகப் பேசுவது நாகரிகம் என்ற பண்பு காற்றில் கரைந்து விட்டது. செல்போனில் பேசுபவர்கள்தான் எவ்வளவு உரத்துப் பேசுகிறார்கள்! பேருந்து, ரயிலில், உடன் பயணிக்கும் பிற பயணிகளுக்குத் தொந்தரவாக இருக்குமே என்று சிறிதும் யோசிக்காமல் பெருங்குரலெடுத்துப் பேசுகிறார்கள். மெதுவாக யாராவது பேசுகிறார்கள் என்றால், அவர்கள் அனேகமாக தம் மனைவி அல்லது காதலியுடன் பேசுகிறார்கள் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.
நூலகங்களில் ‘அமைதி காக்கவும்’ என்று பலகைகள் எச்சரிக்கும். அதையும் மீறி சில நூலகங்களில் குறட்டை ஒலி, அந்த நூலகத்தைப் பயன்படுத்துபவர்களைப் பாடாய்ப் படுத்தும். மனித உடலைப் பொறுத்தவரை 50 டெசிபல்களுக்கு அதிகமான ஓசை நல்லதல்ல. ஆனால் நகரைப் பொறுத்தவரை எங்குமே 70 டெசிபல்களுக்குக் குறைவாக ஒலி கணக்கிடப்படவில்லை என்பது காதுகளைப் பொத்திக் கொள்ள வைக்கும் ஒலித் தகவல்.
இரைச்சல் மனநிலையைப் பெரிதும் பாதிக்கும் என்கிறார்கள். முற்காலத்தில் எந்தக் குற்றவாளியிடமிருந்தாவது உண்மையை வரவழைக்க வேண்டும் என்றால் அவரை ஒரு அறைக்குள் அடைத்து விட்டு, அந்த அறை சுவர்களில் ஏதாவது ஓசை படுத்திக் கொண்டே இருப்பார்களாம். அடி, உதை தண்டனைகளைவிட இந்த இரைச்சல், எரிச்சல் மிகுந்த தண்டனையாக இருக்குமாம். குற்றவாளி அலறி அடித்துக் கொண்டு உண்மையை ஒப்புக் கொண்டு விடுவாராம்.
கிட்டத்தட்ட அதுபோன்ற தண்டனையை இன்று நகரில் ஒவ்வொருவருமே அனுபவித்து கொண்டுதான் வருகிறோம்.
உள்ள இரைச்சல் போதாதென்று டூவீலர்களில் வித்தியாசமான சைலன்ஸர் பொருத்திக்கொண்டு பெருஞ்சத்தமிட்டபடி ஓட்டிச் செல்லும் சிலர் அதை ஒரு விளையாட்டாகக் கருதுகிறார்கள். ஆனால், அந்த இரைச்சலால் பிறர் மட்டுமல்லாமல், தமக்குத் தாமே கேடு விளைவித்துக் கொள்வதை அவர்கள் உணர்வதில்லை;
மருத்துவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவலை கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இரைச்சல், வெறும் காதுகளை பாதிப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை. காது கேட்கும் திறன் குறையும் என்பது பொதுவாகத் தெரிந்த உண்மை என்றாலும், அடுத்து அதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும், ரத்த அழுத்தம் அதிகமாகும், ஜீரண சக்தி குறையும், குடல்புண் வரும், ஏன், குறை பிரசவம்கூட ஏற்படும் என்று விளைவுகளைச் சொல்கிறார்கள். கவனக்குறைவு, களைப்பு, எரிச்சல் இவையெல்லாம் அந்த பாதிப்புகளுடன் பெறப்படும் போனஸ் உபாதைகள். இதுபோன்ற பாதிப்புகளின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது. அதோடு, போக்குவரத்து செவியுணர்வை சற்றே குறைக்க காதுகளில் பஞ்சு அடைத்துக் கொள்வது, பிறர் சத்தம் போட்டுப் பேசினாலும், நாம் மெதுவாகப் பேசி அவர்களையும் மெதுவாகப் பேச வைப்பது என்று நம்மை நாமே காத்துக் கொள்வதுதான் நல்லது.