
உலகப் பெருங்கடலின் ஆழத்தில் இருள் ஆட்சி செய்கிறது. அங்கே அதிகப்படியான உயர் அழுத்தம் இருப்பதால், எந்த உயிரினமும் தாக்குப்பிடிக்க முடியாது; ஒரு உயிரினத்தைத் தவிர. அதுதான் பிளாப் ஃபிஷ். இது ஒரு வித்தியாசமான உயிரினமாகும். பார்ப்பதற்கு வினோதமாக தோற்றமளிக்கும் இந்த உயிரினம், நாம் படிக்கும் பல சயின்ஸ் பிக் ஷன் கதைகளில் கற்பனை செய்யும் ஒரு ஜீவராசி போலத் தோன்றும். இத்தகைய அசாதாரண மீனைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உயிரினம் ஆழ்கடலின் உண்மையான புதிராகப் பார்க்கப்படுகிறது. மேலும், அதன் வித்தியாசமான தோற்றம் ஆழ்கடலில் பதுங்கியிருக்கும் உயிரினங்களின் அடையாளமாக மாறியுள்ளது. முதன் முதலாக 2003ல் ஆஸ்திரேலியக் கடற்கரையில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் பேசுபொருளாக இது மாறியது. முதன் முதலாக இதைப் பார்த்தபோது இந்த உயிரினம் இயற்கையின் விதிகளை மீறியது போல் தெரிந்தது. பார்ப்பதற்கு கோரமான ஒரு கொழ கொழ தோற்றம் மற்றும் எப்போதும் கோபமாக இருப்பது போன்ற முகத்துடன் இருப்பதால், இதை, 'உலகின் அசிங்கமான மீன்' என்று அழைக்கின்றனர்.
இந்த மீனின் தனித்துவமான தோற்றம், அது இயற்கையின் வடிவமைப்பின் விளைவாக இல்லை. மாறாக, அது இருக்கும் வாழ்விடத்தை சார்ந்ததாகும். இந்த மீன் சுமார் 4000 அடி ஆழ்கடலுக்கு அடியில் காணப்படுகிறது. அந்த இடத்தில் அழுத்தமானது மேற்பரப்பை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். மற்ற விலங்குகள் அந்த இடத்துக்குச் சென்றால் மரணம் நிச்சயம். ஆனால், பிளாப் பிஷ்ஷின் ஜெலட்டின் உடலமைப்பால், அதிக அழுத்தத்தைத் தாங்கும் சூழலை அனுமதிக்கிறது.
இந்த மீனின் ஜெல்லி போன்ற சதை தண்ணீரை விட அடர்த்தி குறைவானதென்பதால், அந்த ஆழத்திலும் கடலில் இது நீந்துவதற்கு அனுமதிக்கிறது. இதனால் அதன் ஆற்றலைப் பாதுகாத்து பதுங்கியிருந்து இரையை வேட்டையாடும். இருப்பினும் இந்த மீன்களுக்கும் அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் வணிக நோக்கத்துக்காக இழுவை வலைகளை கடலில் பயன்படுத்தி கடலுக்கு அடியில் இருக்கும் அனைத்தையும் பிடிக்கும்போது இந்த மீனும் அதில் மாட்டிக்கொண்டு அழிகிறது. அவ்வளவு அழுத்தத்திலிருந்து இதை மேற்பரப்புக்குக் கொண்டு வரும்போது, ஜெலட்டின் சதை அதற்கான தன்மையை இழக்கிறது. இதனால் இந்த உயிரினங்கள் அதிக அளவில் அழிகிறது.
அரசாங்கமும் இயற்கை ஆர்வலர்களும் இந்த பிளாப் மீனையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்க பல பணிகளைச் செய்து வருகின்றனர். நிலையான மீன்பிடி கொள்கைகளுக்கு ஆதரவளிப்பது மூலமாக இத்தகைய அசாதாரண உயிரினங்கள் அழிவதைத் தடுக்க முடியும்.