எச்சரிக்கை! மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தாகும் மாசுபாடு! 

Impact of Pollution
Impact of Pollution

மாசுபாடு என்பது ஒரு உலகளாவிய பிரச்சினையாகும். இது மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காற்று, நீர் மற்றும் நிலம் என பல்வேறு வகையான மாசுபாடுகள் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பதிவில் மாசுபாடு குறித்த சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 

மாசுபாட்டால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்: 

மாசுபாடு, குறிப்பாக காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும். நுண்ணிய துகள்கள், நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பைட் டை ஆக்சைடு மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் போன்ற நச்சுக்களை நாம் சுவாசிக்கும் போது சுவாசப் பிரச்சினைகள், இருதய நோய்கள் மற்றும் அகால மரணம் கூட ஏற்படலாம். நீண்ட காலம் காற்று மாசுபாட்டில் இருப்பதால் ஆஸ்துமா, மூச்சு குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படும். மேலும், மாசுபாடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி தொற்றுநோய் பரவுவதை எளிதாக்குகிறது. 

நீர் மாசுபாடு மற்றொரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும். ஏனெனில் இது குடிநீர் ஆதாரங்கள் மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாசுபடுத்துகிறது. அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் ஹெபடைடிஸ் உள்ளிட்ட நீர்வழி நோய்கள் ஏற்படலாம். மேலும் அசுத்தமான நீரில் இருக்கும் நச்சு ரசாயனங்கள் வளர்ச்சி குறைபாடு, இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் உறுப்பு சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். 

மாசுபாடும், சுற்றுச்சூழல் விளைவுகளும்: மாசுபாடு, சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைத்து, பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிக்கிறது. காற்று மாசுபாடு தாவரங்களுக்கு தீங்கு விளைவித்து அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதால், ஒளிச்சேர்க்கை குறைந்து அவற்றின் விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. மாசுபாட்டால் நீர்வாழ் உயிரினங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறக்கின்றன. 

ரசாயனங்களால் ஏற்படும் மாசுபாடு உணவுச் சங்கிலியை மோசமாக்கி, ரசாயனங்கள் நிரம்பிய உயிரினங்களை உட்கொள்ளும்போது வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற கிரீன் ஹவுஸ் கேஸ் வெளியேறுவதால், காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. காலநிலை மாற்றம் புவி வெப்பமடைதல், கடல் மட்டம் உயர்வு, மோசமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
டெல்லியில் மட்டும் ஏன் அதிக மாசு?
Impact of Pollution

மாசுபாட்டின் விளைவுகள் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தாண்டியும் உள்ளது. அதாவது மாசுபாட்டால் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கும். மாசு தொடர்பான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அதிகரிப்பதால் சுகாதாரச் செலவுகள் உயர்ந்து வருகின்றன. உற்பத்தித்திறன் குறைவு, விவசாய விளைச்சல் குறைதல் போன்றவை பொருளாதாரத்தை மேலும் மோசமாகி சமூக வளர்ச்சியைத் தடுக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படும். 

இப்படி மாசுபாட்டால் பல்வேறு வகையான பாதிப்புகளையும் நாம் சந்திக்க நேரிடும். எனவே இதன் தீவிரத்ன்மையை கருத்தில் கொண்டு, இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கமும் தனி நபர்களும் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com