
நிலச் சுற்றுச்சூழலில் புல்வெளிகள் அதிக முக்கியத்து வத்தைப் பெற்றுள்ளன. புல்வெளிகளில் வாழக்கூடிய தாவரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. புல்வெளி நிலங்கள் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து மூன்று பிரிவுகளாக உள்ளன.
1 வெப்ப மண்டல புல்வெளிகள் (Tropical grass land) ஆப்பிரிக்காவில் இவ்வகைக் காடுகள் மரபு புல்வெளி நிலம் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு உயர்ந்த புல்களும், மூலிகை செடிகளும், குட்டையான மரங்களும் காணப் படுகின்றன. மரபு புல்வெளிகளில் ஒட்டகச்சிவிங்கி, வரிக் குதிரை மற்றும் மான் வகைகளை சார்ந்த விலங்கினங்கள் போன்ற பல்வேறு உயிர்கள் காணப்படுகின்றன. மரபு புல்வெளி நிலங்கள் ஒளிசேர்க்கைக்கு மிக சிறந்த முறையாக கருதப் படுகிறது. பெரும்பான்மையான கார்பன்டை ஆக்சைடு இப் புல்வெளிகளில் ஈர்க்கப்பட்டு ஆக்ஸிஜன் வெளியேற்றப்படுகிறது.
2 மிதவெப்ப மண்டல புல்வெளி நிலங்கள்(Temperate grass lands)
இவ்வகை புல்வெளிகள் இருக்குமிடங்களில் மழைக் காலங்களில் அதிகக் குளிரும் கோடைக்காலங்களில் அதிக உஷ்ணமும், வறட்சியும் நிலவுகின்றன. குளிர் காலங்களில் அதிகமான புல்கள் வளர்வதாலும், கோடை காலங்களில் தீ அதிகமாக ஏற்படுவதாலும் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் வளர்ச்சி அடைவது தடுக்கப் படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடா போன்ற காடுகளில் இவ்வகை காடுகள் பிரெய்ரி (prairie) என்றும், தென் அமெரிக்காவில் பாம்பஸ் (pampus)என்றும், ஐரோப்பாவின் மையப்பகுதி மற்றும் ஆசியாவில் இவ்வகை நிலங்கள் புல் சமவெளி என்றும் அழைக்கப்படுகின்றன.
இவ்வகை புல்வெளிகளில் அதிக அளவில் ஆவியாக்கப் படுகிறது. கோடை காலங்களில் தீ அதிக அளவில் ஏற்படுவதற்குரிய சாதகமான சூழ்நிலைகள் நிலவுகின்றன.
3. குளிர்ந்த புல்வெளிகள் (polar grass lands)
இவ்வகைக் காடுகளில் மிக அதிகமான குளிர்ச்சியும், பனியும், மூடுபனியும் காணப் படுவதால் மரங்கள் வளர்வதற் குரிய சாதகமான தட்பவெப்ப நிலை ஏற்படுவதில்லை. கோடை காலங்களில் அதிகமான நேரத்திற்கு சூரிய ஒளி கிடைக்கப்படுவதால் சிறிய தாவரங்கள் வளர்ச்சி அடைகின்றன. இவ்வகை காடுகளில் கொசுக்கள் மற்றும் பல்வேறு வகையான பூச்சிகள் மற்றும் பறவைகள் இடம் பெயர்ந்து இங்கு காணப்படுகின்றன.
புல்வெளி நிலங்களின் கூறுகள்
உயிரற்ற கூறுகள்: புல்வெளி சூழ்நிலை முறையில் கார்பன்டை ஆக்சைடு, நீர், நைட்ரேட், பாஸ்பேட் மற்றும் சல்பேட்டுகள் போன்றவை இப்பகுதியில் உள்ள காற்று மற்றும் மண்ணில் காணப்படுகிறது. மேலும் இவ்வகை நிலங்களிலிருந்து, சோடியம், இரும்பு மற்றும் செம்பு போன்ற சத்துக்களும் தாவரங்களுக்கு கிடைக்கப் படுகின்றன.
உயிருள்ள கூறுகள்: இவை மூன்று இனங்கள் அடங்கியதாகும்.
1.உற்பத்தியாளர்கள்: தாவரங்கள் மற்றும் மிருகங்களுக்கு தேவையான உணவு புல்வெளிகளிலிருந்து கிடைக்கப்படுகிறது. பொதுவாக Graminae வகையைச் சேர்ந்த புல்கள் அதிகமாக வளர்கின்றன.
2. நுகர்பவர்கள்: பொதுவாக புல்வெளிகளில் காணப்படும் நுகர்பவர்கள் புல்வெளிகளில் உள்ள தாவரங்களையே உணவாக உட்கொள்கின்றன. இதில் முதல் நிலை நுகர்வோரின் முக்கிய உணவு புல் மற்றும் தாவரங்களின் இலையாகும். இவ்வகை நிலங்களில் பசு, எருமை மாடுகள், மான்கள், ஆடு, முயல், எலி , சுண்டெலி மற்றும் பல்வேறு பூச்சிகள் போன்றவை தாவர உண்ணிகளாய் இருக்கின்றன.
இரண்டாம் நிலை நுகர்வோர்கள் மாமிச உண்ணிகள் ஆகும். தாவர உண்ணிகளை மாமிச உண்ணிகளான நரி, குள்ளநரி, பாம்பு, தவளை, பல்லி மற்றும் பறவைகள் போன்றவை உணவாக உட்கொள்கின்றன.
3. மட்குபவைகள்: இறந்த உயிரினங்கள், மற்றும் உதிர்ந்த இலைகளைப் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் சிதைக்கப்பட்டு மீண்டும் மண்ணிற்குரிய வளங்களை கொடுக்கின்றது.