
18 அடியில் அச்சுறுத்தும் உருவம். 'பேரைக் கேட்டாலே சும்மா பதறுதுல்ல'! என்று நினைக்கும் அளவிற்கு உண்மையான ராஜா தான் இந்த ராஜ நாகம். பெயருக்கு ஏற்றார் போல் அவை ராஜாவாக இல்லை என்பதுதான் காடு சொல்லும் சர்வைவல் தியரி. உலகத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பு என்கின்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு ராஜநாகம் காட்டில் வாழ்ந்து விட முடியாது. அவை முட்டையிலிருந்து வெளியே வந்த நொடியில் இருந்து
தனித்து தான் வாழ்ந்தாக வேண்டும். கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போல் ராஜ நாகங்கள் பிறக்கும் பொழுதே ஆயுதங்களுடன்தான்(விஷம்) பிறக்கும். வயது முதிர்ந்த ராஜ நாகத்திற்கு இருக்கின்ற அதே விஷமும் வீரியமும் குட்டிகளுக்கும் இருக்கும்.
ராஜ நாகக் குட்டிகளுக்கு கழுகுகளும், கீரிகளும், தேன்வளைக்கரடிகளும் தான் எதிரிகள். அவற்றிடமிருந்து சண்டை போட்டு தப்பிப்பதே கடினம். ராஜ நாகத்தின் வாழ்க்கை என்பது மிகவும் தனித்துவமானது. ராஜ நாகங்கள் தனிமையானவை. ஆனால் அவை இரையைப் பகிர்ந்து கொள்ளும். தங்கள் கூட்டாளியைக் கண்டுபிடித்த பிறகு, அவை தங்கள் துணையுடன் சில வாரங்கள் வாழ்கின்றன.
அவை மிகவும் மெதுவாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. குஞ்சுகளை பொரித்த பிறகு அவற்றை சிறிது காலம் கவனித்துக் கொள்கின்றன. ராஜ நாகங்கள் வலுவான நச்சுத்தன்மையை கொண்டிருந்தாலும், தற்காப்புக்காகவே நஞ்சை பயன்படுத்துகின்றன. இது அவற்றின் இரையைக் கொல்ல உதவுகிறது.
Ophiophagus இனக்குழுவின் கீழ் வருவதால், அதன் பெயரில் நாகம்(Cobra) இருந்தாலும், இது உயிரியல் முறையில் உண்மையான நாகப்பாம்பு இனத்தைச் சேர்ந்த பாம்பு அல்ல. இந்திய துணைக் கண்டத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் சீனா வரை பரவியுள்ள இந்த மிக நீளமான விஷப் பாம்புகள், பரவலாக காணப்பட்டாலும் பொதுவாக மனிதர்களுடன் எதிர்ப்படுவதில்லை.
2023ஆம் ஆண்டு European Journal of Taxonomy இதழில் ராஜ நாகம் என்பது ஒரு இனம் அல்ல; 4 தனித்தனி இனங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள ராஜ நாகத்தின் நான்கு வகைகள்: சுண்டா கிங் கோப்ரா(ஓபியோபகஸ் பங்காரஸ்), நார்தன் கிங் கோப்ரா(ஓபியோபகஸ் ஹன்னா), லூசன்(Luzon) கிங் கோப்ரா (ஓபியோபகஸ் சல்வடனா),
மேற்கு தொடர்ச்சி மலையில் வாழக்கூடிய கிங் கோப்ரா (ஓபியோபகஸ் காளிங்கா).
கர்நாடகா மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள ஒரு சிறிய கிராமம் அகும்பே. இது இந்தியாவின் 'ராஜ நாகங்களின் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. காரணம் இங்கு குறுகிய பரப்பளவில் அதிகமான ராஜ நாகங்கள் காணப்படுவது தான்.
King cobra versus mamba:
கிங் கோப்ரா பிளாக் மாம்பாவை விட பெரியது மற்றும் நீளமானது. உலகின் மிக நீளமான விஷப்பாம்பு. 18 அடி நீளம் வரை வளரும். தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ராஜ நாகங்கள் 10 பவுண்டுகளுக்கு மேல் எடை உள்ளதாக இருக்கும். அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. 20 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. இவை அளவில் சிறிய நாகப் பாம்புகளையும், அனகோண்டாக்களையும் கூட விழுங்கக் கூடியது.
கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழ்விடமாகக் கொண்டவை. அதிகபட்சமாக 9 அடி வரை நீளமுள்ளது. இவை பகலிலே இரை தேடும். உடல் சாம்பல் நிறமாக இருந்தாலும் வாயின் உட்புறம் கருப்பாக இருப்பதால் 'கருப்பு மாம்பா' என்று அழைக்கப்படுகிறது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும். அந்த அளவுக்கு நச்சுத்தன்மை உடையவை. இரண்டுமே கொடிய விஷமுள்ள பாம்புகள். ஆனால் இவை இரண்டும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றன.