உலகிலேயே மிக ஆபத்தான உயிர்க்கொல்லி கொசு! எப்படி?

Mosquito
Mosquito

லகிலேயே மிகவும் மோசமான உயிர்க்கொல்லி எது என்று தெரியுமா? ராஜநாகமோ, மிகப்பெரிய யானையோ, சிங்கமோ, புலியோ கிடையாது. பட்டுனு அடிச்சா பொட்டுன்னு போயிடும் தம்மாத்தூண்டு கொசுதான். அதை மிக அற்பமான உயிராகவும், கொசுதானே என்று கேலியாகப் பேசுகிறோம். இந்த கொசுவால்தான் ஒவ்வொரு ஆண்டும் உலகில் அதிகப்படியான மக்கள் இறக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? உலகிலேயே மிகவும் கொடூரமான விலங்கும் இதுதான்.

இப்படிப்பட்ட அபாயகரமான கொசுக்கள் ஏற்படுத்தும் மோசமான நோய்த்தொற்றுகளில் ஒன்று சிக்குன் குனியா. 2006ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் இந்தியாவுக்குள் ஏடிஸ் என்ற ஒரு வகை கொசு கடிப்பது மூலமாக நுழைந்தது. பின்னர் பல மாநிலங்களுக்கு அதிதீவிரமாகப் பரவியது. நமது நாட்டைப் பொறுத்தவரை குப்பைகள், கழிவுநீர் அகற்றம் போன்ற எல்லா சுத்திகரிப்பு விஷயங்களுமே செயலிழந்து கிடக்கிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குப்பைகள் மலை போலவும், சாக்கடைகள் ஆறு போலவும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாகவே அதிகப்படியான கொசுக்கள் பரவுவதாகக் கூறப்படுகிறது. சாதாரண காய்ச்சல் போல தொடங்கி, பின்னர் தன் வேலையைக் காட்டும் மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் மூன்று நாளில் தொடங்கி, மூன்று மாதங்கள் வரை நோயாளியைப் படுக்கையில் போட்டு விடுகிறது.

இப்படி, திடகாத்திரமாக இருக்கும் மக்களை நோயில் தள்ளுவதே இந்த சிறிய கொசுக்களின் வேலையாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ, நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதற்கோ இவற்றுக்கென பிரத்தியேக மருந்துகள் இல்லாமல் போனதும் தற்போதைய நவீன விஞ்ஞான வளர்ச்சியின் கொடுமையாகும். எல்லாவிதமான உடல் உபாதைகளுக்கும், காய்ச்சல்களுக்கும், உடல் வலிகளுக்கும் வழக்கமாக நாம் எடுத்துக்கொள்வது பாராசிட்டமால்தான். இத்தனைக்கும் இந்த கொசுக்கள் நாம் விழித்துக்கொண்டிருக்கும் பகல் பொழுதிலேயும் கடிக்கின்றன.

எந்த நோயைப் பற்றிய செய்தியைப் போட வேண்டுமென்றாலும், 'வேகமாகப் பரவுகிறது' என்று போட்டால் மட்டுமே நாம் நம்முடைய ஆரோக்கியம் குறித்து யோசிக்கிறோம். இவ்வாறு இல்லாமல் எப்போதும் நம்முடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக நமது நாட்டில் மலேரியாவும், டெங்குவும் கும்மாளம் அடிக்கின்றன. இன்றளவும் இந்த நோய்களைப் பரப்பும் கொசுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. அரசாங்கமும் வருடா வருடம் கொசுக்களை ஒழிப்பதற்காக பட்ஜெட் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், வருடம்தான் போகிறதே தவிர, இந்த கொசுக்களை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.

என்னதான் கொசுக்களால் பல நோய்கள் வந்தாலும், அவற்றுக்கான சரியான மருந்துகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் நம்முடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதே கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கான சிறந்த மருந்தாகவும், தடுப்பாகவும் இருக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com