சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் வனவிலங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களோடு சேர்த்து பாதுகாக்கும் நடைமுறை வனவிலங்குப் பாதுகாப்பு என்று அழைக்கப்படுகிறது. மனிதனின் பேராசையை நிறைவேற்றுவதற்காக எண்ணற்ற வனவிலங்குகள் படுகொலை செய்யப்படுகின்றன. அவை பல இடங்களுக்கு சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதிகமாகக் கொல்லப்படும் விலங்குகளும், காரணங்களும்:
காட்டெருமை: இவற்றின் தோல் பகுதி தோல் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. எலும்புகளைக் கருவிகளாக மாற்றுகிறார்கள்.
யானைகள்: யானைகளின் தந்தங்களில் இருந்து நகைகள் மற்றும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. எனவே, ஏராளமான யானைகள் கொல்லப்படுகின்றன. அவற்றின் தோலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
புலிகள்: உயர்தர ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஃபர் தேவைக்காக புலிகள் கொல்லப்படுகின்றன. இவற்றின் எலும்புகள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
மலைப்பாம்புகள்: ஆடம்பரக் கைப்பைகள் மற்றும் பெல்ட்டுகளுக்காக இவற்றின் தோல்கள் பதனிடப்படுகின்றன.
திமிங்கலங்கள்: உணவுக்காகவும், மெழுகுவர்த்தி, சோப்பு மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும் கொல்லப்படுகின்றன.
முதலைகள்: தோல் கைப்பைகள் மற்றும் காலணிகளுக்காக இவை கொல்லப்படுகின்றன.
மான்கள்: தோல் தயாரிப்புப் பொருள்களுக்காக படுகொலை செய்யப்படுகின்றன. இவற்றின் கொம்புகள், கருவிகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் வடிவமைக்கப் பயன்படுகின்றன.
பறவைகள்: ஃபேஷன் பாகங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பிற்காக இறகுகள் சேகரிக்கப்படுகின்றன.
சுறாக்கள்: இவற்றின் துடுப்புகள் சூப்பு செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரத்தில் தோல் உரித்தெடுக்கப்பட்டு தோல் பொருள்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
வனவிலங்குகளைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
பாதுகாப்புச் சட்டங்கள்: வேட்டையாடுதல் மற்றும் விலங்குப் பொருள்களின் சட்ட விரோத வர்த்தகத்தைத் தடுக்கும் வலுவான வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை அரசாங்கங்கள் இயற்றி, அவற்றை செயல்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கான தண்டனையை அதிகரிப்பது மற்றும் வனவிலங்குக் குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வது ஆகியவை இதில் அடங்கும். பல விலங்கினங்கள் எல்லைகளைத் தாண்டி கடத்தப்படுவதால் சர்வதேச ஒத்துழைப்பு இதில் மிகவும் முக்கியம்.
வனவிலங்குக் காப்பகங்களை மேம்படுத்துதல்: தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிறுவுவது, அழிந்து வரும் உயிரினங்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக செயல்படும். வேட்டையாடுதல் மற்றும் காடழிப்பு போன்றவற்றிலிருந்து அவற்றின் இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலம் விலங்குகள் சுற்றுச்சூழல் அமைப்புகள் செழித்து வளர உதவுகின்றன. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப் பணி மேற்கொள்வது ஊடுருவலைத் தடுக்க உதவும்.
விழிப்புணர்வு: பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் வனவிலங்குகளைப் பாதுகாக்க அயராது உழைக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு நன்கொடைகள், தன்னார்வ தொண்டுகள் அல்லது அவர்களின் பணி பற்றிய விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்கலாம்.
நிலையான நடைமுறைகள்: நிலையான விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி நடைமுறைகளை ஊக்குவிப்பது, விலங்குகளின் வாழ்விட அழிவைத் தடுத்து உள்ளூர் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்க முடியும். வேளாண் காடு வளர்ப்பு, இயற்கை விவசாயம் மற்றும் பொறுப்பான மீன் பிடித்தல் போன்ற நடைமுறைகளை ஊக்குவிப்பது வனவிலங்குகளின் மீதான தாக்கத்தை குறைத்து பாதுகாப்பான பொருளாதார ஊக்கத்தை உருவாக்குகிறது.
தொழில்நுட்பப் பயன்பாடு: தொலைதூரப் பகுதிகளில் வான்வழி கண்காணிப்புக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம். அதேநேரத்தில் கேமரா பொறிகள், விலங்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்கவும் வேட்டையாடுபவர்களை கண்டறியவும் முடியும். ஜி.பி.எஸ் கண்காணிப்பு விலங்குகளின் அசைவுகள் குறித்த மதிப்புமிக்க தரவை வழங்க முடியும். இந்தப் பாதுகாப்பு உத்திகளை திறம்பட செயல்படுத்தலாம்.
சமூக ஈடுபாடு: உள்ளூர் மக்களுக்கு நிலையான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு அறிவியலின் திறன்களை கற்றுத் தர வேண்டும். வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்க உள்ளூர் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். வனவிலங்கு சுற்றுலாக்களை ஏற்படுத்த மக்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
இந்த உத்திகளை ஒருங்கிணைத்து அரசாங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனி நபர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் வனவிலங்குகளை மனிதக் கொடுமையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை உருவாக்க முடியும்.