பூமியில் எழுபது சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அது `நீலக் கிரகம்’ என அழைக்கப்படுகிறது. பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்தாலும் ஒரு சதவிகித அளவு தண்ணீர்தான் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மீதியுள்ள தண்ணீரெல்லாம் கடலில் காணக்கூடிய உப்புத் தண்ணீராகவோ அல்லது உறைந்த பனிக்கட்டிகளாகவோ உள்ளன.
மனிதனின் உடலிலும் 75% நீர் தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்ல நீர் அவசியமாகிறது. அது போல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகிறது. உணவின்றி சில நாட்கள்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நீரின்றி ஒரு நாள் தாக்குப் பிடிப்பதே சிரமம். இதிலிருந்தே நீரின் முக்கியத்துவத்தை அறியலாம். நம் உடம்பிலோ அல்லது ஏனைய உயிரினங்களின் உடம்பிலோ நீர் எவ்வளவு இருக்கின்றது என்பதை எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அனைத்து பாலூட்டிகளின் உடலிலும் நீர் ஒரு முக்கிய அங்கம். உடலில் கொழுப்பின் அளவை நீக்கிவிட்டுப் பார்த்தால், மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளிலும் நீரின் அளவு 71-78 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உடலில் நீரின் அளவு, வயது, பால், உடல் எடை போன்ற காரணிகளால் மாறுபடும். பிறந்த குழந்தையின் உடல் எடையில் 85-90 சதவிகிதம் நீர் மிகுந்திருக்கும். இளைஞர்கள் உடலில் 55-60 சதவிகிதம் நீர் உள்ளது. தண்ணீரின் தேவையை, தண்ணீரின் அவலத்தை ‘தண்ணீர்... தண்ணீர்...’ அளவுக்கு எந்தப் படமும் சொல்லவில்லை.
"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு."
நீர் இல்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால், நீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோமா என்பது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. வரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லக் கூடிய மிகப் பெரிய சொத்துகளில் ஒன்று நீர் வளம். அது சாத்தியமா? இன்னும் 50 ஆண்டுகளில் சொல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்கின்றன ஆய்வுகள். பெட்ரோல் தடடுப்பாடு காலத்தில் மக்கள் வரிசையில் வாகனங்களோடு நிற்பதுபோல, தண்ணீருக்காக மனிதர் நிற்கும் காலம் வரலாம். நீர்வளத்தின் மீது அக்கறை கொள்ளாமல் இருந்தால் நிலத்தடி நீரை நாம் முற்றிலுமாக இழக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. நிலத்தடி நீர் ஊறும் இடங்களில் உப்பு நீர் படரவும் வாய்ப்பு இருக்கிறது. நீரை சிக்கனமாக ஆள்வது மட்டும் நம் கடமையல்ல. நீர் ஆதாரத்தை பெருக்குவதும் நம் கையில்தான் உள்ளது. அதற்கு நம்மால் இயன்ற அளவு வீட்டிற்கு ஒரு மரத்தை நட்டு வைப்போம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை கடைப்பிடிப்போம். இயன்ற அளவு நீர் நிலைகளை பாதுகாப்போம். தினமும் ஒரு சில துளிகளாவது தண்ணீரை சேமிப்போம். "சிறுதுளியே பெரும் வெள்ளமாகும்" விரைவில்...
ஊர் கூடி தேர் இழுப்போம் !
மழை நீரை சேகரிப்போம் !
நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் !
மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர் நீர் !