‘கடல் கரப்பான் பூச்சி’ என அழைக்கப்படும் உயிரினத்தின் விநோத அம்சங்கள்!

Hog fish
Hog fish
Published on

ஹாக்ஃபிஷ் - ஆழ்கடலில் வசிக்கும் ஒரு கண்கவர் உயிரினம் ஆகும். அதன் தனித்துவமான மற்றும் வேடிக்கையான அம்சங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தோற்றம்: ஹாக்ஃபிஷ் ஒரு நீளமான ஈல் போன்ற உடலைக் கொண்டுள்ளது. இதற்கு மண்டையோடு உண்டு. ஆனால், முதுகெலும்பு இல்லை. இவை தள்ளாடியபடி நீந்துவதால் வழுக்கி கொண்டு நீந்துவதை போன்று தோற்றம் தருகிறது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும்.

முடிச்சுப் போடும் திறமை: தன்னை வேட்டையாட வருபவர்களிடருந்து தப்பிக்க ஹாக்ஃபிஷ் ஒரு விசித்திரமான நடத்தையை வெளிப்படுத்துகிறது. தனக்குத்தானே ஒரு முடிச்சு போட்டுக் கொள்கிறது. இதுவும் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். இதன் வாயைச் சுற்றி பல உணர்ச்சி கூடாரங்களைக் கொண்டுள்ளன. அவற்றால் உணவை சுற்றி முகர்ந்து பார்ப்பது வேடிக்கையாக இருக்கும்.

சேறு உற்பத்தி: இந்த உயிரினத்தின் மிக விசித்திரமான மற்றும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று ஏராளமான சேற்றை உற்பத்தி செய்யும் திறனாகும். அவற்றை யாராவது தொந்தரவு செய்தால் அல்லது வேட்டையாட வரும்போது தண்ணீரில் வேகமாக விரிவடைந்து சேற்றை வெளியிடுகிறது. இது வேட்டையாடுபவர்களை செயல் இழக்கச் செய்கிறது. ஒருசில நிமிடங்களில் ஒரு கேலன் சேறு உற்பத்தி செய்கிறது. இது சளி போன்ற அமைப்பில் இருக்கும்.

துப்புரவுப் பணியாளர்கள்: ஹாக்ஃபிஷ்கள் துப்புரவுப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இவை இறந்த விலங்குகளின் உடல்களை உண்ணுகின்றன. இவற்றின் விருப்ப உணவு மீன் மற்றும் முதுகெலும்பில்லாத கடல் உயிரினங்கள் ஆகும். அவற்றின் மென்மையான திசுக்களை இவை உண்ணுகின்றன மற்றும் இறந்த விலங்குகளின் உடலுக்குள் புகுந்து உள்ளே இருந்து உண்ணும். பெரும்பாலும் ஹேக் ஃபிஷ்கள் மீனின் சடலங்களை சுற்றித் தொங்குவதைக் காணலாம்.

தாடை இல்லாத அதிசயம்: இவற்றுக்குத் தாடைகள் இல்லை. தாடைகளுக்கு பதிலாக சிறிய கூர்மையான கொம்பு போன்ற அமைப்புள்ள பற்கள் உள்ளன. இவை புரதப் பொருட்களால் ஆனவை. தாங்கள் உண்ணும் இரையின் சதையைக் கீறிக் கிழிக்கப் பயன்படுத்துகின்றன.

மோசமான பார்வைத்திறன்: இவற்றுக்கு மோசமான பார்வைத்திறன் உள்ளன. கடலின் இருண்ட ஆழத்தில் செல்வதற்கு இவை தொடு உணர்ச்சி மற்றும் வாசனை உணர்வை நம்பியே உள்ளன. மோசமான பார்வைத் திறனுடன் இவற்றின் அசாதாரணமான வடிவம் மற்றும் வழுக்கும் அசைவுகளும் இணைந்து நகைச்சுவையான அழகை சேர்க்கின்றன.

இதையும் படியுங்கள்:
நுரையீரல் தொற்று நோய் உண்டாவதற்கான காரணங்கள்!
Hog fish

கடல் கரப்பான் பூச்சிகள்: 4000 அடிக்கும் மேலான ஆழமான கடலில் கூட இவற்றால் செழித்து வளர முடிகிறது. கடுமையான சூழலில் உயிர் வாழும் இவற்றின் திறனை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிடுகிறார்கள். கரப்பான் பூச்சிகள் நிலப்பரப்பில் அழுக்கை உண்டு வாழ்கின்றன. மேலும் உலகப்போரின்போது ஹிரோஷிமா நாகசாயியில் குண்டு போடப்பட்ட போது கூட அவை உயிர் பிழைத்திருந்தன என்று கூறுகின்றனர். கடுமையான சூழல்களில் கூட செழித்து வளரும் கரப்பான் பூச்சிகளைப் போல ஹாக்ஃபிஷ்களும் துப்புரவுப் பணி காரணமாகவும் மற்றும் கடுமையான சூழ்நிலைகளில் கூட இவை உயிரோடு இருக்கின்றன. பழைமையான பரிணாம பண்புகள் இவற்றை ஒப்புமைப்படுத்த வைக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல் அமைப்புகளில் நீண்ட காலமாக இவை இருக்கின்றன.

மருந்தாகும் சளி: இவற்றின் வாயிலிருந்து வெளிவரும் சேறு போன்ற அமைப்பு, மூக்குச் சளியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை பலவித நோய்களை தீர்க்க மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட ஆயுள்: இவை நீண்ட காலம் வாழக்கூடியவை. 30 ஆண்டுகள் வரை வாழும் என்று நம்பப்படுகிறது. முட்டையிடுவதன் மூலம் இவை இனப்பெருக்கம் செய்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com