வௌவால்கள் ஏன் பறக்கின்றன?அதிநவீன ஆய்வுகள் விவரிக்கும் அதிசயமும் ரகசியமும்!

bat
bat
Published on

உலகிலேயே பறக்கத் தெரிந்த ஒரே பாலூட்டி வௌவால் (Bat) மட்டும்தான். ஆனால், இந்த வௌவாலின் சிறகுகள் எப்படி உருவாயின? மற்ற பாலூட்டி விலங்குகளைப் போல அதன் கைகள் ஏன் விரல்களாக மாறாமல், இறக்கைகளாக (Wings) நீண்டு விரிந்தன? இந்தக் கேள்விக்கான பதில்தான், புதிய அறிவியல் ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கிரேக்க மொழியில், வௌவால்களின் அறிவியல் பெயரான 'Chiroptera' என்பதற்கு 'கை-சிறகு' என்பதுதான் அர்த்தம்.

சாதாரண பாலூட்டிகளின் கையைப் போலவே, வௌவாலுக்கும் ஐந்து விரல்கள் உண்டு. ஆனால், மற்ற விலங்குகளுக்கு விரல்கள் சிறியதாக இருக்க, வௌவாலின் நான்கு விரல்கள் மிக மிக நீளமாக நீண்டுள்ளன. இந்த நீண்ட விரல்களுக்கு இடையே, மிக மெல்லிய தோல் சவ்வு (Wing Membrane) ஒன்று பரவி, பறப்பதற்குத் தேவையான 'லிஃப்ட்' (Lift) எனப்படும் உயரத்தைத் தூக்கும் சக்தியை உருவாக்குகிறது.

பறக்கும் அணில் (Flying Squirrel) போன்ற விலங்குகள் காற்றில் சறுக்கிச் (Glide) செல்ல மட்டுமே முடியும். ஆனால், வௌவால் மட்டுமே தன் சக்தியைப் பயன்படுத்தி, நீண்ட தூரம், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உண்மையாகப் பறக்க (Powered Flight) முடியும். வௌவாலின் கைகள் ஒரு சாதாரண கையாக இல்லாமல், வான் பயணத்திற்கான சிறந்த கருவியாக (Aerodynamic Tool) உள்ளது.

வௌவாலின் இறக்கை எப்படி உருவானது என்பதை விஞ்ஞானிகள் அதிநவீன நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்தனர். அதில், நம் எல்லோருடைய உடலிலும் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வின் ரகசியம் பிடிபட்டது.

இதையும் படியுங்கள்:
குதிச்சா கல்லா மாறிடுவீங்களா? உலகின் விசித்திரமான ஏரியின் பயங்கர ரகசியம்!
bat

மனிதன் உட்பட எல்லா பாலூட்டிகளின் கருவும் உருவாகும் போது (Embryo), கையில் உள்ள விரல்களுக்கு இடையே ஒட்டப்பட்டிருக்கும் சவ்வை நீக்க, இயற்கையாகவே ஒரு தற்கொலை (Cell Suicide) நிகழ்வு நடக்கும். இதற்கு அபோப்டோசிஸ் (Apoptosis) என்று பெயர். இதுதான் அந்தச் சவ்வை அழித்து, நாம் தனித்தனியான ஐந்து விரல்களைப் பெற உதவுகிறது.

ஆனால், வௌவாலின் கருவில், இந்த அபோப்டோசிஸ் செயல்பாடு, விரல்களுக்கு இடையில் மட்டும் தடை செய்யப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது.

சாதாரண விலங்குகளில் அழிந்து போகும் செல்கள், வௌவாலில் அழியாமல் உயிர் பிழைக்கின்றன. இந்தச் செல்கள் நீண்டு, ஒரு மெல்லிய மீள்சவ்வாக (Elastic Membrane) மாறி, சக்தி வாய்ந்த இறக்கையை உருவாக்குகின்றன.

இந்த அதிசயம் நிகழ வௌவால்களுக்குப் புதிதாக எந்த 'சூப்பர் ஜீனும்' வரவில்லை.

இதையும் படியுங்கள்:
பாண்டாக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 10 சுவாரஸ்ய விஷயங்கள்!
bat

ஏற்கனவே நம்மிடம் உள்ள அதே மரபணுக்கள் தான். ஆனால், அவற்றின் செயல்பாட்டு நேரத்தில் (Timing of Gene Expression) ஒரு சின்ன மாற்றம்.

இந்தச் சிறிய நேர மாற்றம்தான், சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண கையை வளைந்துகொடுக்கும் இறக்கையாக மாற்றியது. இந்த மாற்றம்தான் வௌவால்களை உலகின் ஒரே பறக்கும் பாலூட்டியாக்கியதுடன், இரவு நேர வானத்தின் சக்ரவர்த்தியாகவும் மாற்றியது. ஒரு சிறிய மரபணுக் கட்டுப்பாடு எவ்வளவு பெரிய பரிணாம மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு வௌவால் ஒரு சிறந்த உதாரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com