
வீட்டில் பசுமையாக இருக்க தாவரங்களை வளர்க்க அனைவரும் விரும்புவர். ஆனாலும், மண்ணில் தாவரங்களை வளர்க்க இவர்கள் சிரமப்படுவதுண்டு. உரம், மண் பராமரிப்பு, நீர் பாசன முறைகள் என பல்வேறு செயல்முறைகள் அவர்களுக்கு சுமையாக மாறுகின்றன. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்து எளிய முறையில் செடி வளர்க்க நினைப்பவர்கள் தண்ணீரில் வளரும் தாவரங்களை வளர்ப்பது மிகவும் எளிதானதாக இருக்கும். அந்த வகையில் தண்ணீரில் வளர்க்கக்கூடிய 6 வகை தாவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. போத்தோஸ் (MONEY PLANT): மணி பிளான்ட் செடியை வளர்க்க அதன் தண்டை வெட்டி வேர்கள் வரும் வரை தண்ணீரில் வைத்து வளர்த்து வந்தால் வேர்கள் வளர்வதை கண்கூடாகக் காணலாம். செடிக்கு மிதமான சூரிய ஒளியும் குறைந்த பராமரிப்பும் தேவை என்றாலும், நீண்ட காலம் வளரக்கூடிய செடிகளில் முதன்மையானதாக மணி பிளான்ட் இருக்கிறது.
2. அதிர்ஷ்ட மூங்கில் (LUCKY BAMBOO): நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் பிரபலமாக அறியப்படும் அதிர்ஷ்ட மூங்கில் செடிகளை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். அதிக சூரிய ஒளி படாத இடத்தில் இதை தண்ணீரில் வைத்து வளர்க்கும்போது வேர்கள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாகக் காண முடியும். அழகான உட்புற தாவரமாக இருக்கும் இது, ஆற்றலையும் நல்வாழ்வையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
3. பிலோடென்ட்ரான் (PHILODENTRON): வீட்டில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் என கருதப்படும் இலைகளின் ராஜாக்களான பிலோடென்ட்ரானின் இதய வடிவ இலைகள் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நச்சுக்களை சிறப்பாக உறிஞ்சுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தச் செடியை தண்ணீரில் வளர்ப்பதன் மூலம் வேர் விடுவதை பார்க்க முடியும். பல்வேறு வெப்ப நிலைகளை தாங்கும் தன்மை கொண்ட உட்புற தாவரமாக இருக்கும் பிலோடென்ட்ரான்களை வளர்ப்பது எளிதானதாகும்.
4. சிலந்தி செடி (SPIDER PLANT): பிரகாசமான மறைமுக வெளிச்சத்தை விரும்பும், காற்றை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்ட அலங்கார தாவரமாக இருக்கும் சிலந்தி செடிகளை பாட்டிலில் தண்ணீரில் வைத்து வளர்க்கும்போது வேர்கள் விடுவதைக் காணலாம். ஸ்பைடர் ஐவி ரிப்பன் செடி என வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவற்றை நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாப்பதோடு, குட்டி தாவரங்களிலிருந்து பெரிய செடிகளை வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
5. இங்கிலீஷ் ஐ வி (ENGLISH I V): பென்சீன் மற்றும் பார்மால்டிகைடு போன்ற நச்சு பொருட்களை அகற்றி சுத்தமான காற்றை வழங்கும் அலங்கார செடிகளாக எப்போதும் பூக்கும் கொடிகளாக இருக்கும் இங்கிலீஷ் ஐ வி செடிகள் மிதமான வெப்ப நிலையில் தண்ணீரில் வளர்ப்பதன் மூலம் வேர் விடுவதைக் காணலாம்.
6. புதினா (MINT): செரிமானத்தை விரைவாக்கும் ஆரோக்கியமான புதினா செடிகளில் இருந்து சில தண்டுகளை எடுத்து தண்ணீரில் போட்டு வைக்கும்போது வேர்கள் விடுவதை உறுதி செய்யலாம். வேகமாக வளரும் புதினா செடிகளுக்கு நேரடி சூரிய ஒளி பாதிப்புக்கு உள்ளாக்கும்.
மேற்கூறிய 6 செடிகளையும் ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வளர்க்கும்போது வீடு பசுமையாக இருப்பதோடு அதன் வேர்கள் வளர்வதை கண்கூடாகப் பார்ப்பது ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.