ரோஜா செடி பூத்துக் குலுங்க இப்படி ஒரு ஐடியாவா?

Rose Plant
Rose Plant

வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளையும், மூலிகைச் செடிகளையும் வளர்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பூச்செடிகள் வீட்டிற்கு அழகைச் சேர்க்கும். மூலிகைச் செடிகள் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும். வீட்டுத் தோட்டத்தில் நாம் வளர்க்கும் செடிகளுக்குத் தேவையான உரங்களை, சமையலறைக் கழிவுகளைப் பயன்படுத்தி நாமே தயாரிக்கலாம். பெண்கள் பலருக்கும் ரோஜா பூ என்றால் அலாதி பிரியம். நர்சரிகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் ரோஜா செடிகளில் அதிகளவு பூக்கள் பூக்கும். ஆனால், வீட்டில் வளர்க்கும் ரோஜா செடிகளில் குறைவாகவே பூக்கள் பூக்கின்றன . அதிகளவில் ரோஜா பூக்கள் பூப்பதற்கு, நாம் அதற்கென கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

செடிகளின் வளர்ச்சிக்கு அதிகளவில் பங்களிப்பது உரம் தான். ஆகவே பூச்செடிகளுக்கத் தேவையான அளவு உரங்களை இட்டால், செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதனால், பூக்களும் அதிகளவில் பூக்கும். தினசரி வீட்டில் சேரும் காய்கறி கழிவுகளை பூச்செடிகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்ப்பவர்கள், மரத்தில் இருந்து உதிரும் இலைச் சருகுகளையும், வீட்டிலேயே சேரும் பச்சைக் கழிவுகளையும் சேகரித்து, அதன் மூலம் இயற்கையான உரத்தைத் தயாரிக்கலாம். இப்படி தயாரிக்கப்படும் உரம் செடிகளின் வளர்ச்சிக்கு நன்முறையில் உதவும்.

மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பெருகினால் தான் செடிகள் நன்றாக வளரும். ரோஜா செடிகள் நன்றாக வளர மீன் முள், முட்டை ஓடு, இறால் தோல் மற்றும் நண்டு ஓடு ஆகிய அனைத்தையும் எடுத்து காய வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை 15 நாள்களுக்கு ஒரு முறை மண்புழு உரம் அல்லது ஆட்டுப் புழுக்கையுடன் கலந்து செடிகளுக்கு உரமாக கொடுத்தாலே போதும். ஒவ்வொரு பூச்செடி முனையிலும் ஐந்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துக் குலுங்கும்.

மேற்கண்ட உரத்தை தயார் செய்ய முடியாத நபர்கள், முட்டை ஓட்டை மட்டுமே செடிகளுக்கு உரமாக கொடுத்தால் போதுமானது. வாழைப்பழத் தோல் மற்றும் வெங்காயத் தோல் ஆகியவற்றையும் செடிகளுக்கு உரமாகக் கொடுக்கலாம். ஆனால், எந்த உரத்தையும் காய்ச்சி கொடுக்கக் கூடாது. வீட்டுத் தோட்டத்தை அவ்வப்போது தொடர்ந்து பராமரிக்க வேண்டியதும் அவசியம். முடிந்த வரையில், வீட்டுச் செடிகளுக்கு காலையிலேயே தண்ணீர் ஊற்றி விடுங்கள். அப்போது தான் ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தோட்டத்தில் ரோஜா சாகுபடி செய்யவுள்ளீர்களா? அப்போது இதைப் படியுங்கள்!
Rose Plant

வீட்டில் தோட்டம் வைப்பதற்கு போதிய இடம் இல்லாதவர்கள், கவலைப்பட வேண்டாம். தொட்டிகளில் கூட பூச்செடிகளை நன்முறையில் வளர்க்க முடியும்‌. சூரிய ஒளி படும் இடத்தில் பூத்தொட்டிகள் இருப்பது நலம். கண்கவர் பூச்செடிகள் வீட்டிற்கு அழகையும், மனதிற்கு நிம்மதியையும் அளிக்கக் கூடியவை. பூச்செடிகள் வைப்பதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகையால், வீட்டுத் தோட்டத்திற்கு உதவும் இந்த குறிப்பு பலருக்கும் பயன்படும்.

உங்கள் வீட்டு ரோஜா செடியில் மொட்டு வரவில்லை எனில், மேலே கூறிய உரத்தை தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக ரோஜா பூக்கள் அதிகமாக பூக்கும்‌.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com