மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அவசியம்!

EB meter box
EB meter boxImg Credit: SVET

உழவுத் தொழிலில் விவசாயிகள் அதிகம் நம்பியிருப்பது பருவமழையை மட்டும் தான். தற்போது காலநிலை மாற்றத்தால் பருவமழை கூட சரியான நேரத்தில் பொழிவதில்லை. இதனால், நிலத்தடி நீரையே அதிகம் நம்பியுள்ளனர். தற்போதைய நிலையில், கோடைகாலப் பயிர்கள் அனைத்தும் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு தான் விளைவிக்கப்படுகின்றன. நிலத்தடி நீரை மேலே உறிஞ்சி எடுப்பதற்கு விவசாயிகள் பலரும் போர் அமைத்துள்ளனர். இருமுனை மின்சாரத்தால் அதிக சக்தி கொண்ட நீர் இறைப்பான்களை இயக்க முடியாது. ஆகையால், இதற்கு மும்முனை மின்சாரம் அவசியம் தேவைப்படுகிறது.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் கோடைகாலப் பயிர்களாக நெல், எள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை, வாழை மற்றும் சில பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்பயிர்களைப் பாதுகாக்க நிலத்தடி நீர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக கோடையில் மின்வெட்டு என்பது இயல்பாகி விட்டது. ஆனால், மின்வெட்டால் விவசாயிகளும் வஞ்சிக்கப்படுவது நியாயமல்ல. பல மாவட்டங்களில் குறைந்தது 12 மணி நேரத்திற்கு மும்முனை மின்சாரம் வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தும், இன்றுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கோடைகாலப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கும் மும்முனை மின்சாரம் வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், 14 மணி நேரத்திற்கு மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்த அரசு, 6 மணி நேரம் கூட மும்முனை மின்சாரத்தை வழங்கவில்லை. விவசாயிகள் கோரிக்கை வைத்தவுடன், அவர்களை சமாளிக்க 2 அல்லது 3 மணி நேரம் வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கோடைகால மின்வெட்டும் விவசாயிகளை வெகுவாக பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
முருங்கையில் மதிப்புக் கூட்டு பயிற்சி: விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!
EB meter box

விவசாயிகளுக்கு அதிக ஆதரவை அளிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பல நூறு அடி ஆழத்திற்கும் கீழே சென்று விட்டது. இதனால், அதிக குதிரைத்திறன் கொண்ட நீர் இறைப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றைப் பயன்படுத்த வேண்டுமானால் நிச்சயமாக மும்முனை மின்சாரம் அவசியம் என்பதை மின்சார வாரியமும், தமிழக அரசும் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

குறுவை, சம்பா பருவங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மிகக் கடுமையான இழப்பைச் சந்தித்த விவசாயிகள், கோடைகால சாகுபடியிலும் தண்ணீர் பிரச்சினையால் இழப்பு ஏற்பட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். இவை நடக்காமல் இருக்க வேண்டுமாயின் தடையற்ற மும்முனை மின்சாரம் ஒன்றே தீர்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com