பாரம்பரிய விதை வங்கி மூலம் விவசாயத்தை மீட்டெடுத்த பழங்குடிப் பெண்கள்!

பாரம்பரிய விதை வங்கி மூலம் விவசாயத்தை மீட்டெடுத்த பழங்குடிப் பெண்கள்!
Published on

வேளாண்மையில் பாரம்பரிய விதைகளை மீட்பதன் பங்கு முதன்மையானது. நெல் உட்பட பல்வேறு பயிர் வகைகளின் பாரம்பரிய விதைகளை மீட்கும் முயற்சிகள் தமிழ்நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் பல ஆண்டுகளாக இதை ஓர் அமைப்பாகத் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிக்கே உரித்தான பாரம்பரிய சிறுதானிய விதைகளை மீட்டு பராமரித்து வருகின்றனர். ‘சமுதாய விதை வங்கி’ என்கிற முறையின் மூலம் கொல்லிமலைக்கே உரித்தான 21 வகை பாரம்பரிய சிறுதானிய வகைகளைத் தற்போது வரை இவர்கள் மீட்டு பராமரித்து வருகின்றனர்.

கொல்லிமலையில் பல்வேறு ஊர்களில் செயல்பட்டு வரும் இந்த சமுதாய விதை வங்கிகளை அந்தந்த ஊர்களைச் சேர்ந்த பெண் விவசாயிகளே மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பராமரித்து வருகின்றனர். பழங்குடியின பெண்களால் வழிநடத்தப்படும் இந்த சமுதாய விதை வங்கிகள் மூலம் விளைச்சலும் வருமானமும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் கொல்லிமலை விவசாயிகள். கொல்லிமலையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மகளிர் சுய உதவிக் குழு இயங்கி வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் அந்த ஊரைச் சேர்ந்த 12 பெண் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து ஒரு வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தையும் தங்களின் உற்பத்தியாளர் நிறுவனம் மூலமாகவே கொல்லிமலை விவசாயிகள் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கொல்லிமலை, துவரப்பள்ளம் கிராம சமுதாய விதை வங்கி நிர்வாகி லதா கூறுகையில், “பாரம்பரிய விதைகள் அழிந்துவிடாமல் தடுத்து அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் சமுதாய விதை வங்கிகள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொல்லிமலையில் இந்த சமுதாய விதை வங்கிகள் இயங்கி வருகின்றன. லாப நோக்கம் இல்லாமல் இயங்கக்கூடியதுதான் இந்த சமுதாய விதை வங்கி. ’ஒரு படிக்கு இரு படி’ என்கிற முறையில் இந்த விதை வங்கி செயல்பட்டு வருகிறது. அதாவது. எங்களிடம் விதைகளைப் பெற்று பயிரிடும் விவசாயிகள் அறுவடையின்போது அதை இரண்டு மடங்காக திருப்பித் தர வேண்டும். இத்தகைய நடைமுறையால் விதைகளைத் தொடர்ந்து இருப்பு வைத்துக்கொள்ள முடியும். எங்கள் விதை வங்கியில் கேழ்வரகு, சாமை, தினை எனப் பல சிறுதானிய வகை விதைகள் இருக்கின்றன. முதலில் எங்கள் கிராமத்து விவசாயிகள்தான் விதைகளைப் பெற்று வந்ததனர். தற்போது சில ஊர்களில் விதை அத்துப்போய்விட்டது. விதை தரம் இல்லையென்றால் விளைச்சல் கிடைக்காது. ஆகையால், அப்படி பாதிக்கப்பட்ட மற்ற கிராமங்கள், ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளும் தற்போது தங்களிடம் வந்து விதைகளைப் பெற்றுச் செல்கின்றனர்” என்று தெரிவித்தார்.

கொல்லிமலை குண்டனி பஞ்சாயத்தில் எட்டடிப்பாறை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண் விவசாயி பூங்கொடி கூறுகையில், “கொல்லிமலையில் சிறுதானியங்கள்தான் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. இது மழையைச் சார்ந்த விவசாயம் என்பதால். இங்கு ஆறு மாதங்களுக்குத்தான் விவசாயம் செழிப்பாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை இல்லாத மாதங்களில் எங்கள் கிராம விவசாய மக்கள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று வந்தனர். அப்படி வேலைக்குச் சென்று வந்த 12 பெண்கள் இணைந்து சுய உதவிக் குழு ஒன்றைத் தொடங்கினோம். இந்த சங்கத்தைத் தொடங்கியதில் இருந்து யாரும் வெளியூர்களுக்கு வேலை தேடிச் செல்வதில்லை.  கொல்லிமலையில் எனது தாத்தா, பாட்டி காலத்தில் பயிரிட்ட பல சிறுதானிய வகைகள் இடைப்பட்ட காலத்தில் இல்லாமல் போய்விட்டன. தற்போது இந்த விதை வங்கி மூலமாகத்தான் பாரம்பரிய வகைகளை மீண்டும் பயிரிட்டு வருகிறோம். நான் என் நிலத்தையும் பார்த்துக்கொண்டு விதை வங்கியையும் நிர்வகித்து வருகிறேன். இந்த விதை வங்கியில் கேழ்வரகு, சாமை, தினை எனப் பல சிறுதானிய வகைகள் இருக்கின்றன. குதிரை வாலி போன்ற மானாவரி நெல் வகைகளும் உள்ளன. இந்த விதை வங்கியைத் தொடங்கியபோது 10 விவசாயிகள்தான் முதலில் விதைகளைப் பெற்று புயிரிட்டனர். தற்போது 35 விவசாயிகள் விதைகளைப் பெற்றுள்ளனர்.

பாரம்பரிய விதை வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வோரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் விதைகளை இரண்டு மடங்காக திருப்பித் தருவதால் அதை புதிய விவசாயிகளுக்குக் கொடுக்க முடிகிறது. பாரம்பரிய விதை ரகங்களுக்கு விளைச்சல் நன்றாகக் கிடைப்பதால் அதை கேள்விப்படும் விவசாயிகள் அதிக அளவில் பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர். சிறுதானியங்களை மக்கள் தினசரி உணவாகவும் பல்வேறு வகைகளில் எடுத்து வருகின்றனர். அதுபோக. மீதம் உள்ளவற்றை மதிப்புக்கூட்டி விற்பனையும் செய்து வருகிறோம். விதை வங்கி தொடங்கிய பிறகு சிறுதானிய விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் எங்களுக்கு வருமானமும் அதிகரித்துள்ளது” என்று கூறுகிறார் பூங்கொடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com