காடுகள் மற்றும் கிராமப்புறங்களில் பறவைகள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் போன்ற சிற்றுயிரிகளுக்கு ஏற்றவாறு சுற்றுச்சூழல் இருக்கிறது. அவற்றிற்கான உணவு, தங்குமிடம், பாதுகாப்பு என அனைத்தும் அங்கு அவற்றிற்கு வசதியாக இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இந்த நிலைமை இல்லை. நகர்ப்புறங்களில் வசிப்போர் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற சிறு உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ப தங்களால் முடிந்த வசதிகளை செய்துத் தர வேண்டும். இதனால் பல்லுயிர் பெருக்கம் பராமரிக்கப்படும். ஆரோக்கியமான நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம். அதன் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
வாழ்விடமும் உணவும்: நகர்ப்புறங்களில் வசிக்கும் காக்கை, குருவிகள், ஆந்தை, புறாக்கள், கிளிகள், மைனாக்கள் மற்றும் பெயர் தெரியாத பல பறவைகள், அணில்கள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் போன்றவற்றுக்கு சரியான உணவு தரப்பட வேண்டும். அதற்கான இயற்கை சூழல் இருந்தால்தான் அவை தாக்குப்பிடித்து வளர முடியும். தோட்டங்களிலும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் தாவரங்களை நடவும். அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் கூட தொட்டிச் செடிகளை நடலாம். இந்த தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்கும், பறவைகள் மற்றும் பூச்சிகள் உள்ளிட்ட உயிர்களுக்கும் உணவு மற்றும் தங்கும் இடத்தை வழங்குகின்றன.
பல்வேறு உயிரினங்கள் வாழும் வகையில் பச்சைக் கூரைகள் மற்றும் சுவர்களை நிறுவ வேண்டும். அதாவது வீட்டைச் சுற்றி பசுமையான செடி கொடிகளை நட்டு வளர்க்க வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் செடிகள் மற்றும் தாவரங்களில் பூத்திருக்கும் பூக்களில் இருக்கும் மகரந்தம் மற்றும் தேனை பருகுவதற்காக வண்டுகள், தேனீக்கள் வரும். சாமந்தி மற்றும் வண்ண மலர்கள் கொண்ட செடியினங்கள் பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்களை ஈர்க்கும். வேம்பு, ஆலமரம், மாமரம், கொய்யா, தென்னை போன்ற மரங்கள் பறவைகளுக்கு தங்குமிடத்தையும், உணவையும் அளிக்கும்.
குருவிக்கூடுகள்: சிட்டுக்குருவிகள், குருவிகள் மற்றும் மைனாக்கள் போன்றவை வசிப்பதற்கு ஏற்றது போன்ற இயற்கையான வாழ்விடங்களை, அதாவது கூடுகள் போன்ற பெட்டிகளை வாங்கி வீடுகளில் வைக்கலாம். அவற்றில் தானியங்களைத் தூவி வைக்கலாம்.
மகரந்தச் சேர்க்கைக்கு குறைவான தீங்கு விளைவிக்கும் வேப்ப எண்ணெய் மற்றும் பிற இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி இயற்கையான தோட்டங்களை ஊக்குவிக்கலாம். இதனால் பலவிதமான பறவைகளும் சிறு உயிர்களும் நன்மை அடையும். தனி வீட்டில் இருப்பவர்கள் மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைக்கலாம். அது பல நூறு உயிர்களுக்கு உணவும் வாழ்விடத்தையும் அளிக்கும். ஏராளமான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள், குருவிகள், அணில்கள், மைனாக்கள், கிளிகள் வருகை தரும் அல்லது அங்கேயே கூடுகள் அமைத்து வாழத் தொடங்கிவிடும். தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகளை தவிர்க்க வேண்டும்.
உணவு மற்றும் தண்ணீர்: பறவை இனங்களை ஈர்ப்பதற்காக பறவைத் தீவனங்கள், வெள்ளை சாதம் மற்றும் தண்ணீரை மொட்டை மாடியில் வைக்கலாம். வீட்டின் கொல்லைப் புறத்தில், காம்பவுண்ட் சுவர்களில் இவற்றை வைக்கலாம். உணவு வளங்கள் நகர்ப்புறங்களில் குறைவாக இருக்கும்போது இவை பறவைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ரசாயன பயன்பாட்டைக் குறைத்தல்: பறவைகளுக்கும் மற்றும் இயற்கை உயிரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். காகம் போன்ற பறவைகள், நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை குறைக்க வேண்டும். குப்பைகளை முறையாக டிஸ்போஸ் செய்ய வேண்டும். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, பிற உயிர்களுக்கும் உதவ வேண்டும்.