- மரிய சாரா
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிகளின் பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. பேனா, தண்ணீர் பாட்டில்கள், சிறிய பைகள் என ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிகள் மிகவும் ஆபத்தானவை. ஆபத்தை உணராமல் நாம் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றோம். எதிலும் நெகிழி, எங்கும் நெகிழி. சொல்லப்போனால் நெகிழி இல்லாத இடமே இல்லை. எடை குறைவு, பயன்படுத்த எளிது, விலை மலிவு என மெல்ல மெல்ல நாம் நெகிழிகளை நோக்கி நகர்ந்துவிட்டோம். அதன் பயன்பாட்டிற்கு அடிமைகள் ஆகிவிட்டோம்!
மறுசுழற்சிக்கு பல நூறு ஆண்டுகள் ஆகும்:
இந்த நெகிழிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகள் பேராபத்தானவை. இவை மண்ணில் மட்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொள்கின்றன. இன்று நாம் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் நெகிழிகள் பாதிக்கப்போவது நம்மை அல்ல, நமது நாளைய சந்ததியை தான் இலகுவாக இன்று தூக்கி வீசிவிட்டுச் செல்கிறோம் அவற்றின் நாளைய பேராபத்தை அறியாமல். இது அறியாமையா? அல்லது அறிந்தும் நாம் செய்யும் அசட்டுத்தனமான செயலா?
நிலத்தில் மாசு:
நிலத்தில் எறியப்படும் நெகிழிகள் மட்க நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பதால் அவை மழை நீரை மண்ணுக்குள் செல்வதையும் தடுக்கின்றன. இந்த நெகிழிகளை தெரியாமல் உண்ணும் ஆடு, மாடு, யானை போன்ற விலங்குகள் இறக்கவும் நேரிடுகின்றது. மண்ணில் புதையும் நெகிழிகள் மண்ணின் வளத்தையும் சூறையாடுகின்றன.
நீரின் மாசு:
நீரில் எறியப்படும் நெகிழிகள் நீரில் வாழும் ஆமைகளுக்கும், மீன்களுக்கும் ஆபத்தாக இருக்கின்றன. மீன்களின் உடலுக்குள் நுண்ணிய துகள்களாக நிறையும் இந்த நெகிழிகள் மீன்களுக்கு ஆபத்தாக அமைகின்றன. அதோடு அந்த மீன்களை உண்ணும் மனிதரின் உடலுக்குள்ளும் பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
காற்று மாசு:
நெகிழிகளை தெரிந்தோ தெரியாமலோ எரிக்கும்போது அதன் புகை காற்றில் கலந்து காற்று மாசு ஏற்படுவதோடு, சுவாச கோளாறுகளையும் அதிகரிக்கிறது. சிகெரெட் புகைப்பதால் ஏற்படும் ஆபத்தை விட நெகிழிகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம். நம்மிடையே cancer தற்போது அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இந்த நெகிழிகளின் பயன்பாடும் ஒரு காரணியாக பார்க்கப்படுகின்றது.
எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்:
நெகிழிகளை முற்றிலுமாக ஒரே நேரத்தில் ஒழிப்பது என்பது இயலாத காரியம். ஆனால், பின்வரும் சில எளிய வழிகளை நாம் பின்பற்றுவதன் மூலம் அவற்றின் ஆபத்துக்களை குறைக்கவும் தடுக்கவும் முடியும்.
1. ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெகிழிகளின் பயன்பாட்டை, துணி பைகள், காகித பைகள், வாழை நார் பொருட்கள், வாழை மட்டை தட்டுகள் என மாற்றி பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்து நமது அடுத்த தலைமுறையை பாதிக்காமல் பாதுகாக்க முடியும்.
2. பயன்படுத்திய நெகிழிகளை மரு சுழற்சி செய்ய இயலும் எனில் அவற்றை தூக்கி வீசாமல், தனியாக வைத்து குப்பை கிடங்குகளில், சேமிப்பு தளங்களில் கொண்டு சேர்க்க வேண்டும்.
3. எங்கேனும் பொதுவெளிகளில் நெகிழிகள் கிடந்தால் அவற்றை சரியான குப்பைத்தொட்டியில் போடலாம்.
4. இது நமது சுற்றுப்புறம், நமது தலைமுறைக்கான வசிப்பிடம் என்பதை ஆழமாய் உணர்ந்து நாமும் நமது சூழலும் நெகிழியின் பிடியில் சிக்கி தவிக்காமல் காப்பது நமது கடமை என்பதை அறிந்து வாழ்வோம்.