விவசாய மானியங்களை பெற உதவும் 'உழவன்' செயலி!

Uzhavan App
Uzhavan App

விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை அளிக்கவும், அவர்களுக்கான சேவைகளை மிக எளிதில் வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை “உழவன்” (Uzhavan) எனும் மொபைல் செயலியை உருவாக்கியது. இந்த செயலியின் மூலம் விவசாயிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை இப்போது காண்போம்.

தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை உருவாக்கிய “உழவன்” (Uzhavan) மொபைல் செயலியில் தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய விவரங்களை விவசாயிகள் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். உழவன் செயலியின் வழியாக விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான சுமார் 24 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசின் தோட்டக்கலை, வேளாண்மைத் துறை, வேளாண் வணிகம், சான்றளிப்பு துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வடிப் பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் போன்ற துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை விவசாயிகளால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

உழவன் செயலியின் மூலம் விவசாய மானியத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் முடியும். மேலும் இடுபொருள் முன்பதிவு, மண்வளம், பயிர்க் காப்பீடு, மானியத் திட்டங்கள், விதை இருப்பு, உரங்களின் இருப்பு நிலை, வானிலை அறிவுரைகள், வேளாண் எந்திரங்களின் வாடகை விவரம், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், இயற்கை விவசாய விளைபொருட்கள், சந்தை விலை, வேளாண் செய்திகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் (FPO) பொருள்களின் விவரம், அணைகளின் நீர்மட்டம், பயிர் சாகுபடி வழிகாட்டி, பூச்சி, நோய் கண்காணிப்பு பரிந்துரை, கருத்துகள், அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் உள்ளிட்ட பல விவரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நடிகர் கார்த்தியின் ‘உழவன் ஃபவுண்டேஷன்’!
Uzhavan App

குறிப்பாக தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலங்கள் அனைத்தையும் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகள் குழுவாக சேர்ந்து பதிவு செய்யவும் உழவன் செயலியில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்தச் செயலியின் வழியாகத் தான் அரசு அளிக்கும் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வேளாண் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க முன்பதிவு செய்ய முடியும். விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யவும் வியாபாரிகளின் முகவரிகள் உழவன் செயலியில் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்களையும் இதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

மிகவும் பயனுள்ள உழவன் செயலியை விவசாயிகள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ப்பட்ட உழவன் செயலியில் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் போன்ற தங்களது அடிப்படை தகவல்களைப் பதிவு செய்து பயன்படுத்தலாம். உழவன் செயலியை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது ஆன்டராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்து, வேளாண்மை சார்ந்த பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com