

வெள்ளிக்கோல் வரையன் (அறிவியல் பெயர்: Lycodon aulicus) பாம்பு என்பது இந்திய ஓநாய் பாம்பு என்றும் அழைக்கப்படும். இது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இவை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் பரவலாக காணப்படுகின்றன.
இந்தப் பாம்பை கட்டுவிரியன் என தவறாகக் குழம்பி கொண்டு கொன்று விடுபவர்கள் அதிகம். இவை சாம்பல், பழுப்பு அல்லது கருமை நிறத்துடனும், 10 முதல் 20 வெள்ளை அல்லது மஞ்சள் நிறப்பட்டைகள் கொண்டிருக்கும். இதனுடைய கண்கள் முன்புறம் துருத்தியபடி காணப்படும். இவற்றில் சிறிய இனங்களின் தோல் மெல்லியதாக ஒளி ஊடுருவக்கூடிய வகையில் இருப்பதால் இதன் உள்ளுறுப்புகளை எளிதாகக் காண முடியும். இதன் தலை தட்டையாக லேசான கூர்மையுடன் இருக்கும். இவற்றினுடைய செதில்கள் வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இவை பகல் நேரங்களில் தன் இருப்பிடத்தில் இருந்து கொண்டு இரவு நேரங்களில் மட்டுமே நடமாடக்கூடியது. ஆண் பாம்புகளை விட பெண் பாம்புகள் பெரியதாக இருக்கும். இவை பல்லிகள், தவளைகள், அரணை போன்றவற்றை உண்ணும். இதன் தாடைகளில் அமைந்த முன் 'கோரை பற்கள்' உணவை கடிக்கவும், பல்லிகளை தப்ப விடாமல் பிடித்துக் கொள்ளவும் உதவுகின்றன. இவை பருவ மழை தொடங்கும் முன் இனப்பெருக்கம் செய்கின்றன. 4 முதல் 11 முட்டைகளை இட்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் குஞ்சு பொரித்து வருகின்றன.
கட்டுவிரியன்:
அறிவியல் பெயர் Bungarus caeruleus. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள காடுகளில் காணப்படும் இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை. கொடிய நஞ்சினை உடைய இந்தப் பாம்பை கட்டு விரியன், எட்டடி விரியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இவற்றின் உடலின் நிறம் கருநீலத்தில் இருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக ஒரு மீட்டர் நீளம் வரை வளரும் இவை முதுகெலும்பு நெடுக பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். இவை பக்கவாட்டு செதில்களை விட பெரியவையாக இருக்கும். இவற்றின் தலைப்பகுதி மழுங்கி, சிறிய வட்ட வடிவ கருநிறக் கண்களைக் கொண்டிருக்கும். இவற்றின் தலை கழுத்தை விட சற்று பெரியதாக இருக்கும். தலையில் எந்த குறியீடும் இருக்காது.
ஆண் பாம்புகள் பெண் பாம்புகளை விட பெரியதாகவும் நீண்ட வாலினையும் கொண்டிருக்கும். இவை பொதுவாக வயல்களிலும், எலி வளை, கரையான் புற்று, கற்குவியல்கள் போன்ற இடங்களில் காணப்படும். நீர் நிலைகளுக்கு அருகிலும் காணப்படும். இவை இரவில் திரியும் பாம்புகள் ஆகையால், பகலில் எலி வங்குகளிலோ, கரையான் புற்றுகளிலோ, மண் குப்பை கூளங்களுக்கு இடையிலோ பதுங்கிக் கொண்டிருக்கும். இவை மற்ற பாம்புகளையும், எலிகளையும், ஓணான்களையும் உணவாக உட்கொள்கின்றன. பல்லிகளையும், அரணைகளையும் தின்கின்றன. மேலும் இவை தங்களுடைய குட்டிகளையே தின்னும் இயல்புடையவை.
பாகிஸ்தானிலும், இலங்கையிலும் கூட காணப்படும் இவை மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவை. இவை கடித்தால் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். கடித்த இடத்தில் வலி தெரியாது என்றாலும் விஷம் உடலில் பரவி படிப்படியாக பேச்சு, நடப்பது போன்ற செயல்கள் பாதிக்கும். இவை நரம்பு மண்டலத்தை தாக்கி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதனால் கடிபட்ட நபர் மூச்சுத்திணறி இறக்க நேரிடும்.
கடிபட்ட சில மணி நேரத்துக்கு பிறகு கண்ணிமைகள் சிமிட்ட முடியாமல், பக்கவாத தாக்குதலின் அறிகுறிகள் போல உடலில் காணப்படும். உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் அடுத்த 72 மணி நேரத்திற்குள் காப்பாற்ற முடியும்.