

பொதுவாக, வீட்டைச் சுற்றி தோட்டம் போடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் சில வகை செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வீட்டின் பிரதான வாசலுக்கு முன்பாக இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, வறுமை ஏற்படும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வீட்டிற்கு முன் வளர்க்கக் கூடாத செடிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
போன்சாய் செடிகள்: போன்சாய் செடிகள் அழகாக இருந்தாலும் வளராமல் சிறிய அளவிலேயே குன்றிய நிலையில் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டிற்கு முன் இவற்றை வைப்பதால் வளர்ச்சி மற்றும் செழிப்பில் குறைவு ஏற்படும். ஆகவே, வீட்டின் கதவுகளுக்கு அருகில் போன்சாய் செடிகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முட்கள் நிறைந்த செடிகள்: முட்கள் போன்ற ஊசி இலைகளைக் கொண்ட கற்றாழை போன்ற முள் செடிகள் பார்ப்பதற்கு அழகாக தோன்றினாலும் அதிலுள்ள கூர்மையான முட்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே அமைதியின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை தடுக்க வீட்டின் பிரதான வாசலில் முட்செடிகளை வைக்கக் கூடாது.
பழ மரங்கள்: வீட்டிற்கு முன்பாக பழ மரங்களை நட்டால் எப்போதும் பழங்கள், இலைகள் மட்டும் பூக்களை உதிர்ப்பதன் காரணமாக பிரதான வாசல் சுத்தமாக இருக்காது. குப்பைகள் அமைதியின்மையின் அடையாளமாகவும், வளர்ச்சியை தடுக்கும் என்றும், அசுபமானது என்பதும் வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளதால் வீட்டிற்கு முன்புறம் பழ மரங்களை நடுவதை தவிர்க்க வேண்டும்.
வாடிய மற்றும் இறந்த செடிகள்: வாடிய மற்றும் இறந்த செடிகளில் உயிர் ஆற்றல் இல்லாததால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், கடந்த காலங்களின் பழைய மற்றும் கெட்ட நினைவுகளை கொண்டிருப்பதால் வாடிய அல்லது இறந்த செடிகளை உடனடியாக அகற்றிவிட்டு உயிருள்ள பசுமையான பூச்செடிகளை வளர்ப்பது நல்லது.
பால் வடியும் செடிகள்: சில செடிகளின் இலைகளையும் பழங்களையும் நசுக்கும்போது வெளிவரும் பால் போன்ற திரவம் விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. வாஸ்துவின்படி வீட்டிற்கு அருகில் அத்தகைய செடிகளை வைப்பதால் மன அழுத்தம், சண்டைகள் மற்றும் பதற்றம் அதிகரிப்பதோடு, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் இவற்றை வைப்பது பாதுகாப்பானது அல்ல. ஆகவே, விஷத்தன்மை கொண்ட பால் வடியும் செடிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
பருத்திச் செடிகள்: வாஸ்துவின்படி பருத்தி செடிகள் இறப்பு சடங்குகளுடன் தொடர்புடையதாக இருப்பதால் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கின்றன. இவற்றை வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைப்பதால் தேவையற்ற செலவுகளும் அமைதியின்மையும் ஏற்படும் என்பதால் வீட்டில் வளர்க்கவே கூடாது.
மேற்கூறிய செடிகளை வீட்டில் வளர்க்காமல் புதிய பூச்செடிகளை வளர்த்து புத்துணர்வு பெறுங்கள்.