

எந்த விலங்கிடம் நீங்கள் வம்பு வைத்துக்கொண்டாலும் தப்பித்தவறிக் கூட காகத்திடம் வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், காக்காவை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவு விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கா மிகவும் புத்திசாலியான பறவை. ஒரு விஷயத்தை கருவியாக பயன்படுத்தும் புத்திசாலித்தனம் காக்காவிற்கு உண்டு. உதாரணத்திற்கு ஒரு மரப்பொந்தில் இருக்கும் புழுக்களை குச்சியை வைத்து எடுக்கும் திறன் உண்டு.
நாம் சிறுவயதில் ஒரு காக்கா கதை கேட்டிருப்போம். ஒரு பானையின் அடியில் இருக்கும் தண்ணீரை குடிக்க காகம் கல்லை போட்டு தண்ணீரை மேலே கொண்டு வந்து குடித்திருக்கும். இது வெறும் கதை மட்டும் கிடையாது. இதைப்போலவே ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி செய்து உண்மையிலேயே காகம் அதேப்போல தண்ணீரை குடித்ததை பதிவு செய்துள்ளனர். இது காக்காவின் (Crow memory) காரியத்தை உணர்ந்து செயல்படும் திறமையை காட்டுகிறது. அதுப்போலவே தனக்கு தேவையான கருவியை உருவாக்கிக் கொள்ளக்கூடிய திறமையும் காக்காவிற்கு உண்டு.
காக்கை எதிர்கால தேவைக்காக உணவுகளை சேகரித்து அதை பாதுகாப்பாக மறைத்து வைக்கக்கூடியது. அதை எந்த இடத்தில் வைத்தது என்பதையும் துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியது. காகத்தின் அறிவுத் திறன் 5 வயது முதல் 7 வயது வரை உள்ள மனித குழந்தையின் அறிவு திறனை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதற்கு காரணம் மனித மூளையில் உள்ளது போலவே காகங்களின் மூளையிலும் நியூரான் மிக அடர்த்தியாக உள்ளதாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
அதுப்போலவே காகம் கூட்டமாக வாழ்கிற சமூகப் பறவை. அதனால் ஒன்றுக்கொன்று தகவலை தெரிவித்துக் கொள்கிறது. அதுவும் இதனுடைய அறிவுத்திறன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
அமேரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆய்வாளர்களான Dr. John Marzluff மற்றும் அவருடைய குழுவினர் காகங்களின் ஞாபகசக்தி எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டுப்பிடிக்க 2006 ல் ஒரு ஆய்வை நடத்த ஆரம்பித்தார்கள்.
சில ஆராய்ச்சியாளர்கள் கோரமான முகமூடியை அணிந்துக்கொண்டு சில காகங்களை பிடித்து அதை பயமுறுத்துவது போன்ற செயல்களை செய்துள்ளனர். பிறகு அதை விட்டுவிடுகிறார்கள். இது அந்த காகங்களுக்கு அச்சுறுத்தலை தரக்கூடிய விஷயமாக உள்ளது. மீதி உள்ள ஆய்வார்கள் சாதாரண முகமூடியை அணிந்து அதே இடத்தில் இருக்கிறார்கள். பிறகு ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்தும் முகமூடியை அணிந்துக் கொண்டு அந்த காகங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களால் இரண்டு விஷயங்களை கண்டுப்பிடிக்க முடிந்தது.
பயமுறுத்தும் முகமூடியை அணிந்தவர்களை காகங்கள் சரியாக அடையாளம் கண்டுக்கொண்டு அவர்களை தாக்க முயற்சித்துள்ளது. ஆனால், சாதாரண முகமூடி அணிந்திருந்தவர்களை எதுவும் செய்யவில்லை.
இரண்டாவது விஷயம் அந்த ஆராய்ச்சியாளர்கள் பிடிக்காத காகங்கள் கூட இவர்களை பார்த்து ஆக்ரோஷமாக கத்தியிருக்கிறது.
அந்த எதிர்மறையான விஷயத்தை அனுபவித்த காகம் அதை மற்ற காகங்களிடமும் சொல்லியிருக்கிறது.
2006 முதல் 2012 வரை இதை கவனித்து அதன் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் காகம் 20 வருடங்கள் ஞாபகம் வைத்துக்கூட ஒருவரை பழிவாங்கக்கூடிய நினைவாற்றலை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.