
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்கு உண்டு. பூமியின் பொறுப்பாளர்களாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை மனிதர்களுக்கு உள்ளது. அது ஏன் என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மனிதர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்;
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் நீர், காற்று மற்றும் காடுகள் போன்ற இயற்கை வளங்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. மனிதர்களின் ஆரோக்கியம், விவசாயம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு காலநிலை மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. அவற்றை தணிப்பதில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியம் பல்லுயிரியலைச் சார்ந்தது. அவற்றில் ஏற்படும் மாசுபாடு, வாழ்விட அழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பசுமைத் தொழில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழி வகுக்கும் நிலையான நடைமுறைகளை ஏற்படுத்தலாம். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தனி மனிதனின் பங்கு;
1. வாகனப் பயன்பாட்டை குறைத்தல்;
தற்போது பெருகிவிட்ட வாகனங்களின் உபயோகங்களை குறைக்க வேண்டும். ஏராளமான வாகனங்கள் தினமும் சாலையில் சென்று வருவதால் கார்பன் வெளியேற்றத்தை அதிகரித்து அது மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் வெகுவாக பாதிக்கிறது. எனவே முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் அல்லது நண்பர்களுடன் வாகனங்களை பகிர்ந்துகொண்டு செல்லலாம். குறைந்த தூரத்தில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வதும் உடலுக்கும் நன்மை விளைவிக்கும்.
2. மரங்கள் நடுதல்;
மரங்கள் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சி ஆக்சிஜனை வழங்குகின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உதவுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கலாம்.
3. இயற்கைப் பொருட்களை பயன்படுத்துதல்;
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கை பொருட்களை உபயோகிக்கலாம்.
4. ஆற்றல் நுகர்வை குறைத்தல்;
வீட்டில் இருக்கும் விளக்குகள் மின்சாதனங்கள், மின்விசிறிகள் போன்றவற்றை தேவையில்லாதபோது அணைத்து வைக்கவேண்டும். குறைந்த அளவு ஆற்றலை பயன்படுத்தும் போது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவுகிறது. ஆற்றல் திறன்கொண்ட எல்.இ.டி பல்புகளை உபயோகப் படுத்தலாம்.
5. பிளாஸ்டிக்கை தவிர்த்தல்;
முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு கணிசமான பங்களிக்கின்றன. அதிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் மிக மிக தீங்கு தருபவை. எனவே அவற்றின் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக ஸ்டீல் அல்லது செம்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணை மலடாக்குகின்றன. மண்ணின் சத்துக்களை உறிஞ்சுகின்றன.
6. தண்ணீரைச் சேமித்தல்;
தண்ணீர் ஒரு விலை மதிப்பற்ற வளமாகும். அதைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்க உதவுகிறது. வீட்டில் இருக்கும் குழாய்களில் நீர்க்கசிவுகள் இருந்தால் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும். மழை நீரை சேமித்து வைக்கவேண்டும்.
7. உள்ளூர் வணிகத்தை ஆதரித்தல்;
உள்ளூரில் இருக்கும் விவசாயிகள் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும். சிலர் சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றால் கூட காரை எடுத்துக் கொண்டு பக்கத்தில் நகரத்திற்கு சென்று ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள். அவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். சிறிய விவசாயிகள், வியாபாரிகள், உள்ளூர்க் கடைகளை ஆதரிக்கவேண்டும்.,
8. சுற்றுச்சூழல் கல்வி;
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எடுத்துரைத்து அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் பாதுகாப்பு மற்றும் தூய்மைக் குழுக்களில் சேர்ந்து கடற்கரை, நீர் நிலைகளில் சுத்தப்படுத்தும் வேலைகளை செய்யலாம்.