காற்று மாசுபாட்டை குறைக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

செப்டம்பர் 7, சர்வதேச சுத்தமான காற்று தினம்
Let's reduce air pollution
International day of clean airImage Credits: https://iaq.works/indoor-air
Published on

நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாறுபாடுகள், தொழிற்சாலைகள், மனிதர்களின் நடவடிக்கைகளால் காற்று மாசடைந்து உள்ளது. சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக அளவில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் செப்டம்பர் 7ம் தேதி அன்று நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் உருவாக்கப்பட்டது.

சுவாச நோய்கள், இதய நோய்கள் மற்றும் அகால மரணங்கள் உள்ளிட்டவை காற்று மாசுபாட்டின் கடுமையான உடல் நல பாதிப்புகள் ஆகும். காற்று மாசை தவிர்க்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். அரசாங்கங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனி மனிதர்கள் முயற்சித்தால் இதைக் குறைக்கலாம்.

காற்று மாசுபாட்டை குறைக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

வாகன உமிழ்வைக் குறைத்தல்: அதிகப்படியான வாகனங்களை உபயோகிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். சாலையில் வாகனங்களில் எண்ணிக்கைகள் குறையும்போது வாகனங்கள் உமிழ்வும் குறைவதால் காற்று மாசுபாடு குறையும். அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம். எரிபொருள் தேவையில்லாத எலக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் கார்களை தேர்வு செய்யலாம். மேலும், வழக்கமான வாகன பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு: பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை உபயோகிக்காமல் சூரிய சக்தி, காற்று சக்தி, நீர் மின் சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவது நல்ல தீர்வாகும். புதைப்படிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. இதைக் குறைக்க பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க வேண்டும்.

தொழில்துறையில் மாசுபாட்டை குறைத்தல்: தூய்மையான எரிபொருளை பயன்படுத்தும்போது காற்று மாசுபாட்டை குறைக்கலாம். காற்றை மாசுபடுத்தாமல் இருக்கும் தூய்மையான தொழில்நுட்பங்களை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

விவசாய உமிழ்வு கட்டுப்பாடு: தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளிவிடும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்கவும்.  இயற்கை விவசாயம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்கவிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நீண்ட ஆயுளுக்கான 9 வாழ்க்கை ரகசியங்கள்!
Let's reduce air pollution

கழிவு மேலாண்மை: தொழிற்சாலைகள் கழிவுகளை முறையாக நிர்வகிக்க வேண்டும். கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பதை அல்லது கொட்டுவதை குறைக்க வேண்டும்.

புதை வடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்தல்: விறகு அல்லது நிலக்கரியை எரிப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை எரிக்கும்போது தீங்கு விளைவிக்கும் துகள்கள் காற்றில் பரவுகின்றன. சமைப்பதற்கும் சூடுபடுத்துவதற்கும் மின்சாரம் அல்லது எரிவாயு போன்ற தூய்மையான மாற்றங்களுக்கு மக்கள் மாற வேண்டும். மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உமிழ்வை குறைக்க ஆற்றல் திறன் உள்ள விளக்குகள், உபகரணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்க வேண்டும். பொருட்களை மறுசுழற்சி செய்ய வேண்டும். அவற்றை வெளியில் எறியும்போது காற்று மாசுபாட்டுக்கு பங்களிக்கும்.

மரங்கள் நடுதல்: மரங்கள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற மாசுக்களை உறிஞ்சி சுத்தமான காற்றுக்கு பங்களிக்கின்றன. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அவசியம் மரங்களை நட வேண்டும். மரங்கள் காற்று மாசுபாடுகளை வடிகட்டி காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன.

வீட்டு மாசுபாட்டை கட்டுப்படுத்துதல்: சமையல், துப்புரவு பொருட்கள் மற்றும் பிற மூலங்களில் இருந்து உட்புற காற்று மாசு படாமல் இருக்க,  வீட்டில் காற்றோட்டம் நிலவ ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த துப்புரவுப் பொருட்கள், வண்ணப்பூச்சுகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்களை காற்றில் வெளியிடாத பொருள்களை பயன்படுத்த வேண்டும்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com