ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ள பூமியின் உட்புறச் சூழலின் பலவீனத் தன்மை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் 7.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பல்வேறு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேலும் கடல்களில் இருந்து 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை சுனாமி அலைகள் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும்படி ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம். பூமியில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. அவை ரிக்டர் என்ற அளவுகோலின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் 2.5 என்ற அளவுக்கு மேல் பதிவானால் அவை நிலநடுக்கமாக கருதப்படுகின்றன. பூமியில் பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்க கடற்கரைப் பகுதி, ஆசியாவின் கிழக்கு பகுதி மற்றும் மையப்பகுதி ஆகிய இடங்களில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் அதிகம் நிலநடுக்கம் தாக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்புற விளைவே நிலநடுக்கம் ஆகும். பூமியின் மேல் தட்டில் அமைந்துள்ள பாறைகள் தொடும் பாறை அமைப்புகளைக் கொண்டது. இது புறணி என்று அழைக்கப்படுகிறது.
இந்த புறணி எல்லா இடங்களிலும் சரியாக இருப்பதில்லை, அவை ஒவ்வொரு இடங்களிலும் மாறுபாட்டான நிலைகளைக் கொண்டு இருக்கிறது. உறுதியில்லாததாகவும், வலுவற்றதாகவும், இடைவெளி கொண்டதாகவும், விரிசல் கொண்டதாகவும் காணப்படுகிறது. இப்படி உறுதி இல்லாத இடத்தில் விரிசல் பகுதியில் நகர்வுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக உட்புற பாறைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கின்றன.
இதனால் மேல்ப்புற பாறைகள் அதிர்வை உணர்கின்றன இதுவே நிலநடுக்கம் எனப்படுகிறது. அதேசமயம் பூமி உட்புற பகுதி மாறுபடுவதால் சில இடங்களில் அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகிறது.