சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிநபரின் பங்களிப்பு என்ன?

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிநபரின் பங்களிப்பு என்ன?
Published on

த்திய, மாநில அரசுகள் என்னதான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல துரித நடவடிக்கைகள் எடுத்தாலும், அதில் தனிநபரின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். நமக்காகவும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் நாம் செய்யாமல் இருப்பது அவசியம். எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாதபடி நாம் எப்படியெல்லாம் இருக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

மின்சாரப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்: அதிகப்படியாக மின்சாரம் பயன்படுத்துவதால், அதிகப்படியான கார்பன் வாயு வெளியேறுகிறது. எனவே, மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்துவதன் மூலமாக அதிகப்படியான கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். மின்சாரத்தை சேமிக்க, வீட்டின் அனைத்து விளக்குகளையும் LED விளக்குகளாக மாற்றலாம். குறிப்பாக, வீட்டில் பயன்படுத்தும் ஃபேன்களை தேர்வு செய்யும்போது குறைந்த மின்சாரத்தில் இயங்கக்கூடிய BLDC பேன்களைப் பயன்படுத்தலாம்.

நெகிழிப் பொருட்களைத் தவிர்ப்போம்: தற்போது நெகிழிப் பொருட்கள் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், நாம் நினைத்தால் நம்மால் முடிந்தவரை அதன் பயன்பாட்டைக் குறைக்க முடியும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கைப்பையுடன் செல்வது நல்லது. அரசாங்கம் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனக் கூறினாலும், பெரும்பாலான குளிர்பானங்கள் மற்றும் சில பொருட்கள் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கவர்களிலேயே வருகின்றன. அதன் உள்ளிருக்கும் பொருட்களை பயன்படுத்திவிட்டு, பிளாஸ்டிக்கை வீதியில் வீசிச் சென்றுவிடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களின் மறு சுழற்சிக்கு பல கோடி ஆண்டுகள் ஆகுமாம்.

அதிக வாகனப் பயன்பாட்டைத் தவிருங்கள்: இப்போதெல்லாம் அருகில் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அனைவருமே தங்களின் வாகனங்களிலேயே செல்கின்றனர். வாகனத்தில் செல்வது சொகுசாக இருந்தாலும், இதன் பயன்பாட்டால் வெளியேறும் கார்பன் வாயுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. முடிந்தவரை பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிருங்கள். அருகில் இருக்கும் இடத்துக்கு நடந்து செல்லுங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இதனால் சுற்றுச்சூழல் அதிகப்படியான மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

பொருட்களை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்துங்கள்: அந்தக் காலத்துடன் ஒப்பிடுகையில் இப்போது மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. பயன்படுத்தும் பொருட்கள் கொஞ்சம் பழையதாக மாறிவிட்டாலும் அதை மாற்றிவிட்டு புதிய பொருட்களை வாங்கவே பலரும் விரும்புகின்றனர். யாருக்கும் நீண்ட காலத்துக்கு ஒரு பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. இவ்வாறு நன்றாக இருக்கும் பொருளை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தாமல் புதியதாக ஒரு பொருளை வாங்கும்போது, அந்தப் பழைய பொருள் குப்பையாக மாறிவிடுகிறது.

உலகிலேயே எந்த உயிரினமும் பூமியில் தனது குப்பைகளை சேர்ப்பதில்லை. மனிதன் மட்டுமே இதில் விதிவிலக்காக செயல்பட்டு, பூமியை குப்பைக் கிடங்காக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com