உமிழ்வுகள் என்பவை வாகனங்கள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வீடுகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் கண்ணுக்குத் தெரியாத புகையைக் குறிக்கிறது. இந்தப் புகை சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் மற்றும் பூமிக்கும் தீங்கு விளைவிக்கும். பூஜ்ஜிய உமிழ்வுகள் (Zero Emissions) என்பது இந்த புகை முற்றிலும் அகற்றப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு மாசுகளை நீக்கும் செயலாகும்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் உமிழ்வுகள்:
கார்பன் உமிழ்வுகள்: இது பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுவதைக் குறிக்கிறது. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு பங்களிக்கிறது.
காற்று மாசுபாடு: மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் துகள்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் டை ஆக்சைடுகள் அல்லது ஆவியாகும் கரிம சேர்மங்கள் போன்ற மாசுகள்.
நீர் மாசுபாடு: நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது குடிநீரை மாசுப்படுத்தும் கழிவுகள்.
ஒலி மாசுபாடு: மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடிய அதிகப்படியான சத்தத்தை குறிக்கிறது.
இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வை பெற தேவையான அம்சங்கள்: பூஜ்ஜிய உமிழ்வுகள் இந்தியாவில் சாத்தியம். ஆனால், அதற்கு ஆற்றல், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மற்றும் முதலீடுகள் தேவை.
மின்சார வாகனங்கள்: வாகனங்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் போன்றவற்றில் இயங்காமல் மின்சாரத்தில் இயங்கும்படி வடிவமைக்கப்பட வேண்டும். இவை செயல்பாட்டின்போது எந்தவிதமான உமிழ்வையும் உருவாக்காது. ஹைபிரிட் வாகனங்கள் வழக்கமான உள் எரிப்பு இயந்திரத்தை மின்சார மோட்டார் மற்றும் பேட்டரியுடன் இணைத்து உமிழ்வைக் குறைக்கிறது.
ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்கள்: இவை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. நீராவி மற்றும் வெப்பத்தை மட்டுமே வெளியேற்றுகின்றன.
ஆற்றல் உற்பத்தியின் பின்னணியில் பூஜ்ஜிய உமிழ்வு:
சூரிய சக்தி: சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உருவாக்குகிறது. இவை மின் உமிழ்வை உற்பத்தி செய்யாது. சோலார் பேனல்களை பயன்படுத்தி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை வழங்கலாம்.
காற்றாலை சக்தி: காற்றாலை ஆற்றலில் இருந்து மின்சாரத்தை உருவாக்குவதால் இதுவும் உமிழ்வை உருவாக்காது.
நீர் மின்சாரம்: நகரும் நீரின் ஆற்றலில் இருந்து மின்சாரத்தை உருவாக்குவதால் உமிழ்வை உருவாக்காது.
புவி வெப்ப சக்தி: புவி வெப்ப ஆற்றல் பூமியின் மையத்தின் வெப்பத்திலிருந்து மின்சாரத்தை உருவாக்குவதால் உமிழ்வை உருவாக்காது.
தொழிற்சாலைகளில் பூஜ்ஜிய உமிழ்வு: மறுசுழற்சி என்பது கழிவுப் பொருட்களை புதிய பொருட்களாக மாற்றுவது, மூலப்பொருட்களின் தேவையை குறைப்பது மற்றும் கழிவுகளை குறைப்பது ஆகும்.
கிளோஸ்டு லூப் சிஸ்டம்: இது கழிவுகள் மற்றும் உமிழ்வை குறைக்க பொருட்களை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பூஜ்ஜியக் கழிவு உற்பத்தி: இது கழிவுகளை குறைப்பதற்கும் மறுசுழற்சியை அதிகப்படுத்துவதற்கும், தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை வடிவமைப்பதையும் உள்ளடக்கியது.
பசுமை உள்கட்டமைப்பு: பசுமைக் கட்டடங்கள், பச்சைக் கூரைகள் மற்றும் பசுமையான இடங்கள் போன்ற பசுமை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நகர்ப்புற வெப்பத்தைத் தணிக்கவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
நிலையான விவசாயம்: இயற்கை விவசாயம் மற்றும் துல்லியமான விவசாயம் போன்ற நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்து, விவசாயத்தில் இருந்து வெளியேறும் உமிழ்வைக் குறைக்கலாம். சுற்றுச்சூழல் நட்பு விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கலாம்.
கழிவு மேலாண்மை: மறுசுழற்சி மற்றும் உரமாக்கல் போன்ற பயனுள்ள கழிவு மேலாண்மை நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம், குப்பை கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளை குறைக்கலாம் மற்றும் கழிவு சிதைவினால் ஏற்படும் உமிழ்வைக் குறைக்கலாம்.