'சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு' வைத்தாய் மனிதா?

House Sparrow
House Sparrow
Published on

சுற்றுச் சூழலை தம் இனிய குரலால் மகிழ்விக்கும் பல உயிரினங்களில் குறிப்பிடத் தக்கது சிட்டுக் குருவி. ஆமாம், அதிகாலையின் எரிச்சலூட்டாத அலாரம்தான் அதன் கீச், கீச் குரல். இப்போது அந்த கீதம் காற்றினிலே கரைந்து மறைந்துவிட்டது. 

வெளியே தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், நம் வீட்டுக்குள்ளேயே வந்து தனக்கென்று தனியே கூடு அமைத்துக் கொண்டு, நம்மோடேயே வாழ்ந்து வந்தது அந்தச் சின்னஞ்சிறு பறவை.

அந்த நாளைய நம் வீட்டு விதானம் மர உத்திரங்களால் அமைக்கப்பட்டதாக இருந்தது. அந்த உத்திரத்தின் முனை சுவரோடு சேர்ந்திருக்கும் இடைவெளியில் சிட்டுக் குருவி கூடு கட்டி வசித்து வந்ததை நாம் இன்று நினைவில் மட்டும் கொண்டு பெருமூச்சு விடுகிறோம். அந்நாளைய நம் வீட்டுக் குழந்தைகள் அந்தச் சிட்டுக் குருவிகளுடன் பாசமாகவும், நேசமாகவும் வளர்ந்து ஆரோக்கிய மனநிலையுடன் வாழ்ந்ததும் நம் வாழ்க்கைச் சாலையின் கானல் நீர் சம்பவம்தான்.

யோசித்துப் பாருங்கள், அந்த காலத்து கிராமத்து வீட்டின் முன்னறையில் நம்மை விட்டுப் பிரிந்த மூத்தவர்களின் புகைப்படங்களை சட்டமிட்டு, சுவரில் மாட்டியிருப்போம். சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில் படத்தின் இரு பக்க ஆதாரத்துக்காக தடிமனான நூல் அல்லது மெல்லிய கம்பியால் பிணைத்திருப்போம். சுவரில் ஒரு கட்டை அடித்து அதன் மேல் படத்தின் அடிப்பாகத்தை நிறுத்தியிருப்போம். இதனால் படத்துக்கும் சுவருக்கும் இடையே கவிழ்த்த முக்கோண பரிமாணத்தில் கொஞ்சம் இடம் இருக்கும். இந்த இடத்தை சிட்டுக் குருவிகள் வெகு சுதந்திரமாகத் தமது இருப்பிடமாக்கிக் கொள்ளும். அந்த இடைவெளியில் மெல்லிய வைக்கோல் போன்ற பொருட்களைப் பரப்பி, கூடு கட்டிக்கொண்டு நமக்கு நன்றி சொல்லும் தோரணையில் கீச், கீச்சென்று குரல் எழுப்பும். 

இதையும் படியுங்கள்:
குறைகிறது வல்லூறுகளின் எண்ணிக்கை! பாதிப்புகள் மிக அதிகம்... எச்சரிக்கை!
House Sparrow

இது மட்டுமா, விதானத்திலிருந்து தொங்க விடப்பட்ட மின்விசிறியின், கவிழ்த்த கோப்பை போன்ற மேல் பாகத்தில் கூட சிட்டுக் குருவிகள் கூடு கட்டும். சுழலும் மின்விசிறியால் தனக்கு ஆபத்து நேரலாம் என்றுகூட உணர்ந்துகொள்ளத் தெரியாத அதன் அப்பாவித்தனத்துக்கு ஆறுதலாக, பெரும்பாலும் நாம் அந்த மின்விசிறியை ஓடவிடவே மாட்டோம். அந்தக் கூட்டில் குடும்பம் நடத்தி குஞ்சுகள் பொரித்து, அவையும் இயல்பாகப் பறந்து வெளியேறிய பிறகுதான், அந்த கவிழ்த்த கோப்பையை ஏதாவது அட்டைகொண்டு மூடி, சிட்டுக் குருவி மீண்டும் கூடு கட்டிவிடாமல், அதனால் அது விசிறியில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டோம்.

சில சமயங்களில் தம் கூட்டிலிருந்து கால் தவறி குஞ்சு ஏதாவது கீழே விழும். உடனே வீட்டிலுள்ளோர் பதைபதைத்து அதைப் பக்குவமாக எடுத்து, அதற்கு வலிக்காதபடி மென்மையாகப் பற்றி மீண்டும் கூட்டிலேயே விடுவதாகிய பறவை நேயம் இருந்தது. இந்த சம்பவத்தைச் சற்றுத் தொலைவில் இருந்தபடியே மிகுந்த பதட்டத்துடன் தாய்க் குருவி பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறு தன் குஞ்சு பாதுகாப்பாக கூட்டில் விடப்பட்ட பிறகு, பறந்தோடி வந்து அந்தக் குஞ்சை தன் குட்டிச் சிறகுகளால் அணைத்துக் கொண்டு, தன் தலையை மெல்லத் திருப்பி நமக்கு நன்றி சொல்லும். இந்த உணர்வு பூர்வமான காட்சி நம் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் படிமம்தான்.

இதையும் படியுங்கள்:
சதுப்பு நில மரங்களின் முக்கியத்துவம் பற்றித் தெரியுமா?
House Sparrow

இப்போதைய நகரத்து நாகரிக வீடுகளில் மாடம் இல்லை, திறந்த பரண் இல்லை, ஓட்டுக் கூரை, ஒலைக் கூரை, கொட்டகை இல்லை. அதனால் அங்கெல்லாம் வெகு சுலபமாக வசிக்கக்கூடிய சிட்டுக் குருவிகளும் இல்லை. ஆனால் கிராமங்கள் இந்த அளவுக்கு முற்றிலும் சுயநலம் கொண்டவையாக மாறிவிடவில்லை என்பது சிட்டுக் குருவிகளுக்கான ஓர் ஆறுதல்.  நகரத்து வீடுகளில் கிடைக்காத உணவுத் துணுக்குகள் நல்ல வேளையாக அவற்றுக்கு இப்போதும் சில கிராமத்து வீடுகளில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அலைபேசி கோபுரங்கள் வெளியிடும் மின் காந்த அலைகளின் தாக்கத்தால் குருவிகள் இறந்து விடுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு, இப்போதும் கிராமப்புறங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் அத்தகைய கோபுரங்களில் குருவிகள் கூடுகள் கட்டுவதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். உண்மையில் நகரத்திலிருந்து அவை விடைபெறக் காரணம், இங்கே அவற்றின் பசியைப் போக்க யாருமே இல்லை என்பதுதான் என்கிறார்கள். 

இப்படி சிட்டுக் குருவி என்று ஒரு பறவை இருந்தது என்பதை பெரும்பாலான இன்றைய 2K கிட்ஸும் அடுத்து வரும் இளம் தலைமுறையும் நம்புமா என்பதும் ஏக்கம் தொனிக்கும் கேள்விதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com