கனமழையால் நிலத்தின் சத்துகள் அடித்துச் செல்லப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

Agri Land
Agri Land
Published on

அதிகனமழைப் பெய்யும் போது நன்றாக விளைந்திருக்கும் பயிர்கள் மூழ்கி வீணாவது மட்டுமின்றி, மண்ணில் இருக்கும் சத்துகளும் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனைத் தடுக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது இந்தப் பதிவு.

விவசாயத்தில் மகசூலைப் பெற நாம் செய்யும் சிறுசிறு செயல்கள் கூட மிக முக்கியப் பங்காற்றும். நிலைத்தைப் பண்படுத்துவது முதல் உரங்களைப் பயன்படுத்துவது வரை விவசாயிகள் செய்யும் அனைத்து செயல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. விவசாயம் செழித்து வளர மழைநீர் அவசியம். இருப்பினும் சில நேரங்களில் இந்த மழையே விவசாயத்திற்கு பாதிப்பையும் விளைவிக்கிறது. இது இயற்கையின் சீற்றம் என்பதால், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இம்மாதிரியான நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நமக்கு கைகொடுக்கும்.

பருவ காலங்களுக்கு ஏற்ப விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டியது அவசியமாகும். அவ்வகையில், கனமழை பெய்யும் போது மண்ணில் உள்ள சத்துகள் அடித்துச் செல்லாமல் இருக்க நாம் சில யுக்திகளை பயன்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது, அதிகப்படியான மழைநீர் வயல்களில் தேங்கும். இதனைத் தடுப்பதற்கு முன்கூட்டியே வயல்களில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். வடிகால் வசதியின் மூலம் மழைநீர் வயல்களில் தேங்குவதைத் தடுத்து, பயிர் சேதத்தைத் தடுக்க முடியும். எப்போதும் அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கும் விளைநிலங்களில் தேங்கும் மழைநீரைத் தான் முதலில் வடிகட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கனமழையின் போது மண்ணில் இருந்து அடித்துச் செல்லப்படும் பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் சத்துகளை ஈடு செய்யும் பொருட்டு, பொட்டாஷ் மற்றும் யூரியா உரங்களை 25% கூடுதலாக தெளிக்க வேண்டும். பயிர்களில் நுண்ணூட்டச் சத்துகள் குறைவாக இருப்பின், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் யூரியாவை இலை வழியாகத் தெளிக்கலாம்.

மழைகாலத்தில் அதிகளவு மழைநீர் வயல்களில் பெருக்கெடுத்து ஓடும் நேரத்தில், முன்கூட்டியே அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டைகளில் நீரை சேமித்து, விளைநிலத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். குறிப்பாக நெல் வயல்களில் தேங்கிய மழைநீரை வடித்த பின், ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கை மேலுரமாக இடுவதன் மூலம், மழையால் பயிர்களில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளை ஈடுசெய்யலாம்.

இதையும் படியுங்கள்:
நீர் வளத்தை மேம்படுத்த உதவும் நீர் பிடிப்புக் குழிகள்!
Agri Land

பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் தூர் கட்டும் பயிர்கள் மற்றும் இளம் பயிர்களைப் பாதுகாக்க ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இரவு முழுக்க அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில், இந்தக் கலவையில் தெளிந்திருக்கும் மேல் நீரை மட்டும் எடுத்து, மழை நின்ற பிறகு பயிர்களின் மீது தெளிக்கலாம். தூர் விடும் பருவத்தில் இருக்கும் நெற்பயிர்களில் ஊட்டசத்து குறைபாட்டைத் தவிர்க்க, 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு இரவு முழுக்க வைத்துவிட்டு அடுத்த நாள் காலையில் தெளிந்த மேல் நீருடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும், மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காண அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி ஆலோசனை பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com