இந்தியாவின் வளமான கலாச்சாரத்தில் பாரம்பரியமிக்க உணவுப் பொருட்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்தியாவின் உணவுகளில் வாசனை முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் கமழும் உணவுப் பொருட்கள் ஒரு வீட்டின் , உணவுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இந்திய உணவுப் பொருட்கள் நல்ல மணமாக இருக்க அதில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளன.
கேரள மாநிலம் 'இந்தியாவின் மசாலா தோட்டம்' என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தின் மலைப் பிரதேசங்கள், மசாலா விளைவிக்கப்படும் தாவரங்கள் வளர ஏற்றதாக உள்ளன. இந்தப் பகுதியின் தனித்துவமான காலநிலை மற்றும் மண் ஆகியவை மசாலா தாவரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளன. கேரளாவின் மசாலா தோட்டங்கள் அதன் பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன. விவசாயிகள் ஏலக்காய், கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் பலவற்றை வளர்க்கிறார்கள்.
கேரளாவின் மசாலா பொருட்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலகப் புகழ் பெற்றவை. உலகம் முழுக்க இந்திய மசாலா பொருட்களுக்கு கடுமையான எதிர்பார்ப்பு இருந்தது.
கேரளாவில் விளையும் மசாலாப் பொருட்கள் கிரேக்க , ரோமானிய மற்றும் எகிப்திய நாகரிகங்களில் முக்கிய தாக்கத்தை கொண்டிருந்தன. தற்போதைய காலக் கட்டத்தில் கூட கேரளாவின் மசாலாப் பொருட்கள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
கேரளாவில் விளையும் சில மசாலாப் பொருட்கள்:
'மசாலாப் பொருட்களின் ராஜா' என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு கேரளாவில் அதிகளவில் உற்பத்தியாகிறது. சமையலில் சுவைக்கு முக்கிய பங்கு வகிக்கும் மிளகு மருத்துவத்திலும் முக்கியமாக உள்ளது. வயநாடு பகுதியில் கருப்பு மிளகு அதிகளவில் பயிரிடப்படுகிறது.
அது போல 'மசாலாப் பொருட்களின் ராணி' என்று அழைக்கப்படும் ஏலக்காயும் இங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஏலக்காய் அதன் கவர்ந்து இழுக்கும் நறுமணம் மற்றும் சுவைக்காகவும், இனிப்புகள், தேநீர், மசாலா உணவுகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுகிறது. கேரளாவின் மூணார் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏலக்காயும் செழித்து வளர்கிறது.
உணவுப் பொருட்களின் தூக்கலான மணத்திற்காக பயன்படுத்தப்படும் இலவங்கப் பட்டையும் கேரளாவில் அதிகளவில் உற்பத்தியாகிறது. இது அசைவ உணவுகளில் முதன்மையாக பயன்படுகிறது. இதில் கடினமாக மணமும் லேசான இனிப்புச் சுவையும் காணப்படுகிறது. மணமூட்டியான இது மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது .
இதே போன்று அதிக மணம் கொண்ட கிராம்பும் , ஜாதிக்காயும் கேரளாவில் முதன்மையாக விளைகின்றன. இவை இரண்டும் உணவுப் பொருட்களில் மணமூட்டியாகவும் , ஆயுர்வேத மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுகின்றன. மேலும் சோம்பு , சீரகம், அனிஸ் பூ, ஜாதிப்பத்திரி, மராட்டி மொக்கு உள்ளிட்ட மசாலா பொருட்களும் பயிர் செய்யப்படுகின்றன.
கேரளாவின் மசாலாப் பொருட்கள் இந்திய உணவு வகைகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச மசாலா சந்தைக்கும் முக்கியப் பங்களிக்கின்றன. உலகம் முழுவதும் மசாலாப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக கேரளா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் மாநில பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்கிறது. இதற்கு அதன் செழுமையான மண் மற்றும் காலநிலைகள் உதவுகின்றன.
கேரளாவில் மசாலா தோட்டங்கள் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களாகவும் உள்ளன. இங்கு பார்வையாளர்கள் பசுமையான பாதையின் வழியாக நடந்து சென்று மசாலாப் பொருட்களின் நறுமணத்தை நுகரலாம். இங்கு சுற்றுலா வருவதோடு மட்டுமல்லாமல் வீட்டு உணவுக்கு தேவையான மசாலாப் பொருட்களையும் வாங்கி செல்லலாம். அதே நேரத்தில் மசாலாப் பொருட்கள் எவ்வாறு பயிரிடப்படுகின்றன மற்றும் அறுவடை செய்யப்படுகின்றன என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.