
சாம்பார், ரசம், காய்கறி போன்றவற்றை சீக்கிரமாக சமைத்து முடிப்பதற்கு அதற்கான பொடிகளை செய்து வைத்துக்கொண்டால் வேலை எளிதாக முடியும். வெயில் காலத்தில் அதிக நேரம் அடுப்படியில் நிற்காமல் சமாளிக்கலாம். அதற்கான பொடி வகைகள் இதோ:
சாம்பார் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் -ஒரு கிலோ
தனியா - முக்கால் கிலோ
மிளகு- 100 கிராம்
விரலி மஞ்சள்- அம்பது கிராம்
துவரம் பருப்பு- கால் கிலோ
கடலை பருப்பு -100 கிராம்
வெந்தயம்- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
பெருங்காயம்- 50 கிராம்
செய்முறை:
மஞ்சள், மிளகாய், மல்லியை வெயிலில் நன்றாக காயவைத்து வைக்கவும். மற்ற பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். கட்டி பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்து சாமான்களோடு சேர்த்து மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டியதுதான்.
தேவையான அளவு வெளியில் வைத்துக்கொண்டு, மற்றவற்றை அப்படியே பாலித்தீன் கவரில் நன்றாக கட்டி ஃப்ரீசரில் வைத்து விட்டால் வாசனை அப்படியே இருக்கும். வேண்டியபொழுது எடுத்து பயன்படுத்தலாம்.
ரசப் பொடி
மிளகாய் வற்றல்- அரை கிலோ
தனியா விதை -100 கிராம்
மிளகு -50 கிராம்
துவரம்பருப்பு -50 கிராம்
சீரகம்- 50 கிராம்
வெந்தயம் -30 கிராம்
கட்டிப் பெருங்காயம்- 25 கிராம்;
விரலி மஞ்சள்- 50 கிராம்
கறிவேப்பிலை -கைப்பிடி அளவு
செய்முறை:
மிளகாய் வற்றலை வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். இதர சாமான்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து வைக்கவும். கட்டி பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்து சாமான்களுடன் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இடித்து வைத்தால் ருசி மிகவும் நன்றாக இருக்கும்.
கூட்டு பொடி:
மிளகு -ஒரு கிண்ணம்
சீரகம்- ஒரு கிண்ணம்
தனியா- ஒரு கிண்ணம்
கடலைப்பருப்பு -ஒரு கிண்ணம்
உளுத்தம்பருப்பு - ஒரு கிண்ணம்
பெருங்காயம்- பத்து கிராம்
மிளகாய்வற்றல்-- இரண்டு கிண்ணம்
செய்முறை:
மிளகாய் வற்றலை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து பொருட்களையும் வாணலியில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து எடுத்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். கூட்டு வகைகளுக்கு தேவையான அளவு இதில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இட்லி பொடி:
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் -ஒரு மூடி
கருப்பு உளுந்து -ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் -ஒரு டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல்- நூறு கிராம்
பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு
புளி- கொட்டை பாக்கு அளவு
ஒரு டேபிள் ஸ்பூன்- உப்பு
செய்முறை:
தேங்காய் துருவல், உளுந்து, கடலைப்பருப்பு, எள், புளி, பெருங்காயம் ,மிளகாய் வற்றல் ஆகியவற்றை வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு வறுத்தெடுக்கவும். பின்னர் ஆற விட்டு, ரவை பதத்திற்கு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள வசதியாக இருக்கும். குழைவான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட ருசி அசத்தும்.
பின் குறிப்பு:
உறவினர் ஒருவர் ஏப்பம் விட்டு களைத்துப் போய்விட்டார். வயிற்றில் ஏதோ அஜீரண பிரச்னை. அதனால்தான் என்று எண்ணிக்கொண்டு பெருங்காயத்தை அதிகமாக சேர்த்தார்கள். சேர்க்க சேர்க்க ஏப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. அவர் மருந்து எடுத்துக்கொள்ளும் ஹோமியோபதி டாக்டரிடம் விசாரித்த பொழுது பெருங்காயத்தை சமையலில் சேர்க்காதீர்கள்.
உங்களுக்கு நான் தரும் மருந்தில் பெருங்காயம் சேர்க்கப்பட்டுள்ளது. அதைவிட அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது இதுபோல் ஏப்பம் வருவது தவிர்க்க முடியாதது. ஆதலால் பெருங்காயம் சேர்க்காதீர்கள் என்று கூறினார். ஆதலால் இதுபோல் ஹோமியோ மருந்து எடுத்துக் கொள்பவர்கள் பெருங்காயத்தை டாக்டரின் அட்வைஸ்படி எடுத்துக்கொள்வது நல்லது.