பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பை வேகவைத்து கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி சேர்த்து விடவும். கொத்தமல்லி தூவி, சிறிது எலுமிச்சம்பழச் சாறு கலந்து விட மிகவும் ருசியான தால் தயார். இது சாதம் சப்பாத்தி பூரி இட்லி தோசை என எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஜோடியாகும்.
மோர் குழம்பு வைப்பது மிகவும் எளிது. அதிகம் புளிப்பில்லாத தயிரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். தேங்காய், இஞ்சி, சீரகம், ஊற வைத்த துவரம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து மோரில் கலந்து விட மிகவும் ருசியான மோர் குழம்பு தயார். சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து போட்டு கலக்க இன்னும் ருசி கூடும். இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
வத்தல் வகைகள் பாகற்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி, வெங்காய வடகம் என எந்த வத்தல் வகையையும் வைத்து சட்டென இந்த குழம்பை செய்துவிடலாம். வெங்காயம், பூண்டு சேர்க்க ருசியையும் கூட்டும் இந்த புளிக்குழம்பு.
இந்த குழம்பு செய்ய காய்கறிகள் எதுவும் தேவைப்படாது. அப்பளங்களை நான்கைந்து எடுத்து எண்ணெயில் பொரித்து கையால் பொடித்து கடைசியாக குழம்பில் சேர்த்து கலந்து பரிமாற சூப்பரான ருசியில் இருக்கும்.
கடலைப்பருப்பை ஊறவைத்து உப்பு, மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொதிக்கும் புளிக்குழம்பில் உருட்டி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்க மிகவும் ருசியான காய்கறிகள் எதுவும் தேவைப்படாத பருப்பு உருண்டை குழம்பு தயார்.
மொச்சை, பச்சைப் பயறு, பட்டாணி போன்ற பயறு வகைகளைக் கொண்டு காய்கறிகள் எதுவும் இல்லாமல் குழம்பு, குருமா என செய்து அசத்தலாம். உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் ருசியாகவும் இருக்கும். செய்வதும் எளிது.
கடலைமாவை நீர்க்க கரைத்து வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் நிறம் மாறியதும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விட இரண்டே நிமிடத்தில் பாம்பே குழம்பு தயார். சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.