ஹம்முஸில் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஹம்முஸ் சாண்ட்விச்கள், ரொட்டி, நான், சப்பாத்தி, பராத்தாவுடன் சாப்பிட ஏற்றது. இந்த ஆரோக்கியமான டிப் செய்வதும் எளிது. இதனை பிரிட்ஜில் வைத்து நான்கு ஐந்து நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.
ஹம்முஸ்:
வெள்ளை கொண்டைக்கடலை 150 g.
பேக்கிங் சோடா 1 சிட்டிகை
வெள்ளை எள் 2 ஸ்பூன்
பூண்டு (பொடியாக நறுக்கியது) 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 4 ஸ்பூன்
உப்பு சிறிது
சீரகத்தூள் ஒரு ஸ்பூன்
கொண்டைக்கடலையை நன்கு கழுவி ஆறு மணிநேரம் ஊறவிடவும். ஊற வைத்த கொண்டைக்கடலையை தேவையான அளவு தண்ணீர், சிறிது உப்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பு கலந்து பிரஷர் குக்கரில் வைத்து 4 விசில் விட்டு நன்கு மென்மையாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எள் சேர்த்து நன்கு வெடித்து பொரியும் வரை வறுக்கவும். மிக்ஸி ஜாரில் எள்ளை சேர்த்து நன்கு பொடிக்கவும். அத்துடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், எள்ளிற்கு தேவையான உப்பு சிறிது, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து அரைக்கவும். அத்துடன் வேக வைத்த கொண்டைக்கடலையும் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். சுவையான ஹம்முஸ் தயார்.
இதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து மேலாக அழகுக்காகவும், சுவையைக் கூட்டுவதற்காகவும் மிளகுத்தூள் அல்லது மிளகாய்தூள் சிறிது தூவி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்க்க மிகவும் ருசியான ஹம்முஸ் தயார்.
இதனை ரொட்டி, சப்பாத்தி, பராத்தாவுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
கிளாசிக் ஹம்முஸ்:
கொண்டைக்கடலை, எள் பேஸ்ட், எலுமிச்சம் பழச்சாறு பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஹம்முஸ் அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் கிரீமி மற்றும் மசாலாவின் சுவை பலவகையான டிபன்களுக்கும் சிறந்த டிப்பாக உள்ளது.
பீட்ரூட் ஹம்முஸ்:
இளம் சிவப்பு நிறத்தில் பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹம்முஸ் சிறிது இனிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். சமைத்த பீட்ரூட்டை மிக்ஸியில் அடித்து ஹம்முஸ் கலவையில் சேர்த்து தயாரிப்பது தான் இந்த பீட்ரூட் ஹம்முஸ்.
மசாலா ஹம்முஸ்:
வெள்ளை கொண்டைக்கடலையுடன் சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் தூள் போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து நம் சுவைக்கு ஏற்ற மாதிரியான கலவையாக இந்த மசாலா தயாரிக்க ருசி அசத்தலாக இருக்கும்.
அவகோடா ஹம்முஸ்:
பாரம்பரிய ஹம்முஸ் பொருட்களுடன் அவகோடா எனப்படும் வெண்ணெய் பழத்தின் கிரீம் சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான டிப் இது. வறுத்த சிகப்பு மிளகாயைப் பொடித்து இந்த ஹம்முசுடன் சேர்ப்பது சுவையைக் கூட்டும்.